சென்னை நீலாங்கரையில் புதிய வீடு இடிப்பு.. அழகப்பன் மனைவி வழக்கு.. கௌதமிக்கு பறந்த நோட்டீஸ்
சென்னை: பிரபல நடிகை கௌதமிக்கு எதிராக அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது. எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கௌதமிக்கு உத்தரவிட வேண்டும் என்றார். இந்த வழக்கில் கௌதமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது..
சொத்துகளை விற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சி.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன், மருமகள், சகோதரர் உள்ளிட்ட பலர் மீது திரைப்பட நடிகையும், அதிமுக பிரமுகருமான கௌதமி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து அழகப்பன் மற்றும் அவரது நாச்சாள் உள்பட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர்களை கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்தனர். இதையடுத்து சிறையில் இருந்த அவர்கள், ஜாமீனில் வெளியே வந்தனர்

இந்நிலையில், அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "சென்னை நீலாங்கரையில் நடிகை கௌதமியுடன் இணைந்து நிலம் வாங்கினோம். அதை நாங்கள் இருவரும் பிரித்துக் கொண்டோம். எனக்குரிய இடத்தில் ரூ.1.5 கோடிக்கு வீடு கட்டி, 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து இருந்தது. இதனிடையே எங்களுக்கு எதிராக கௌதமி அளித்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.
நாங்கள் சென்னை மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்றுத்தான் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால், அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொள்வதாக நடிகை கௌதமி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். இதனிடையே சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தான் எங்களது வீட்டை இடித்ததாக நினைத்து அவர்களிடம் விளக்கம் கோரினோம். ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளோ, தாங்கள் வீட்டை இடிக்கவில்லை என கூறியிருந்தார்கள். இந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக நாங்கள் அறிந்து கொண்டோம். அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது நடிகை கௌதமிதான் ஆட்களுடன் வந்து எங்களது வீட்டை இடித்ததாக தெரிவித்தனர்.
எனவே, எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கௌதமிக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு, வழக்கு தொடர அனுமதி கோருவது தொடர்பாக கௌதமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications