பாம்பு கடித்து விவசாயி மரணம்.. உரிய சிகிச்சை அளிக்காதது ஏன்?.. தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
"ஆரம்ப சுகாதார நிலையம் திறந்திருந்தால் எனது கணவர் பிழைத்திருப்பார். 24 மணிநேரமும் செயல்படும் என்ற அறிவிப்புடன் செயல்படும் அந்த ஆரம்ப சுகாதார நிலையம், அன்றைய தினம் மூடப்பட்டிருந்ததால் எனது கணவரை காப்பாற்ற முடியாமல் போனது"
சென்னை: பாம்பு கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் திருவள்ளூரைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்த வழக்கில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம் புதுராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த அருணா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது கணவர் முரளிக்கு மணலி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி நிலத்தில் இருந்த போது, அவரை மாலை 3.45 மணியளவில் விஷப்பாம்பு ஒன்று கடித்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் உடனடியாக கண்ணன் கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் நாங்கள் அவரை அழைத்து சென்றோம்.

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெறிநாய்க்கடி, பாம்பு கடிக்கு ஊசி போடப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைக்கு சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, சுகாதார நிலையம் வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதால், எனது கணவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கண்ணன் கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறந்திருந்தால் எனது கணவர் பிழைத்திருப்பார். 24 மணிநேரமும் செயல்படும் என்ற அறிவிப்புடன் செயல்படும் அந்த ஆரம்ப சுகாதார நிலையம், அன்றைய தினம் மூடப்பட்டிருந்ததால் எனது கணவரை காப்பாற்ற முடியாமல் போனது. மருத்துவ கவனக்குறைவு காரணமாகவே எனது கணவர் உயிரிழந்திருக்கிறார். எனவே சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு இழப்பீடாக ரூ.10 லட்சமும், எனது இரண்டு பிள்ளைகளின் கல்வி செலவுக்கான தொகையை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தனது மனுவில் அருணா தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சம்பவம் நடந்த அன்று இயங்கியதா அல்லது பூட்டப்பட்டிருந்ததா என்பது குறித்தும், ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் உரிய மருத்துவர் உடன் இயங்குகிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications