புறம்போக்கு நிலத்துக்கு பட்டா தந்த விஏஓ..10 வருடம் கழித்து இடியாக வந்த ஆர்டர்.. இப்போது ஹேப்பி
சென்னை: நாமக்கல் மாவட்டம், அரியலூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்தவர் எம்.சுந்தரமூர்த்தி. இவர் குட்டை புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கலாம் என்று பரிந்துரை செய்த புகாரில் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஏஓ சுந்தரமூர்த்திக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. 10 வருடம் கழித்து அவருடைய பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புறம்போக்கு நிலம், கிராம நத்தம் நிலம் உள்பட பல்வேறு வகையான அரசு நிலங்களில் ஒருவர் பட்டா வாங்கவேண்டும் என்றால் முன்பு, விஏஓ பரிந்துரை செய்ய வேண்டும். விஏஓ பரிந்துரை செய்தால் தான் அவருக்கு பட்டா கிடைக்கும். ஆனால் சில விஏஓக்கள் முறைகேடாக செயல்பட்டு, நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கு துணை போவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படி முறைகேடாக பட்டா வாங்குவதற்கு துணை போகும் விஏஓக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரம் சிலர், அரசியல் அழுத்தம் மற்றும் நிர்வாக அழுத்தம் காரணமாக பலிகடா ஆக்கப்படுவதும் நடக்கிறது.

நாமக்கல் மாவட்டம், அரியலூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்த எம்.சுந்தரமூர்த்தி என்பவர் குட்டை புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்கலாம் என்று அறிக்கை கொடுத்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்து கடந்த 2006-ம் ஆண்டு துறை ரீதியான விசாரணை நடந்தது. பின்னர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விசாரணை அதிகாரி அரசுக்கு அறிக்கை கொடுத்திருந்தார்.
ஆனால், இவரை ஓய்வு பெற அனுமதிக்காமல், பணி நீக்கம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பணி செயலாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுந்தரமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ரவி ஆஜராகி, குற்றச்சாட்டு நிரூபிக்கவில்லை என்று அறிக்கை கொடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் மனுதாரரை பணி நீக்கம் செய்துள்ளதை ஏற்க முடியாது.
அதுவும், பட்டா வழங்கிய விவகாரத்தில் வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அவர்களை எல்லாம் ஓய்வு பெற அரசு அனுமதித்துள்ளது. இத்தனைக்கும் லஞ்சம் வாங்கி மனுதாரர் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் டி.செழியன் ஆஜராகி வாதிடுகையில், 'அரசு நிலத்தை பாதுகாப்பது கிராம நிர்வாக அலுவலரின் கடமை மற்றும் பொறுப்பாகும். ஆனால், இவர் குட்டை புறம்போக்கு நிலத்தை தனியாருக்கு பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளார். இவர் தீவிர குற்றச் செயலில் ஈடுபட்டதால், காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை காரணம் காட்டி நிவாரணம் கோர முடியாது என்று கூறினார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, 'பட்டா வழங்கிய விவகாரத்தில் தாசில்தார் உள்பட அனைத்து அதிகாரிகளும் எந்திரத்தனமாக செயல்பட்டுவிட்டு, பொறுப்புகளை எல்லாம் மனுதாரர் தலையில் வைக்க முடியாது. மேலும், இதுபோல காலதாமதமாக, ஓய்வு பெறும் நேரத்தில் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, மனுதாரரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்கிறேன். அவரை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதிய பண பலன்களை 6 வாரத்துக்குள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications