தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆபீஸை காலி செய்ய கெடு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் தாம்பரம் மாநகர் அலுவலகத்தை காலி செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில், காலி செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் அதுவரை கட்டடத்துக்கான வாடகையை பொதுப்பணித் துறை நிர்ணயித்த 6 லட்சம் ரூபாயில் இருந்து, 13 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார்.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்து, கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி, அந்த இடத்தின் உரிமையாளர்களான கோட்டூர்புரத்தை சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சௌத்ரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

வாடகை நிர்ணயம்
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் எங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கி இருந்தோம். அதன்படி மாதம் ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 300 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிந்தது.
வாடகை கட்டிடம்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ராகவாச்சாரி வாதிடும்போது , "இந்த வாடகை கட்டிடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த பிறகு சில மாதங்களுக்கான வாடகையை கொடுத்து உள்ளனர். அதுவும் ஒப்பந்தப்படி ரூ.10 லட்சம் கொடுக்காமல், ரூ.6 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கி உள்ளனர்.
காலி செய்ய வேண்டும்
ஏற்கனவே காலி செய்து கொடுக்க கோரியுக்கை வைத்த நிலையில், உரிமையாளர்களின் அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களை செய்து வருகின்றனர். எனவே தாம்பரம் மாநகர கமிஷனர் அலுவலகம் இயங்கி வரும் அந்த கட்டிடத்தை உடனடியாக காலி செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
வாடகை அதிகரிப்பு
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டடத்துக்கான வாடகையை பொதுப்பணித் துறை நிர்ணயித்த 6 லட்சம் ரூபாயில் இருந்து, 13 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார்.
2 ஆண்டு கெடு
அது மட்டுமின்றி, இந்த கூடுதல் தொகை நிர்ணயத்தின்படி வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து தர வேண்டிய ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரண்டு ஆண்டுகளில், காவல் ஆணையர் அலுவலகத்தை சம்பந்தப்பட்ட கட்டடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications