டாஸ்மாக் முறைகேடு.. எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரனிடம் விசாரணை? EDக்கு ஐகோர்ட் கேள்வி!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரை எதன் அடிப்படையில் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு எடுத்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீண்ட நாட்களாக நடந்த இந்த ரெய்டில், மதுபானங்கள் கொள்முதல் உட்பட சுமார் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஆதாரங்களை கைப்பற்ற அமலாக்கத்துறை தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டது.

அமலாக்கத்துறை ரெய்டு
அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகள் மட்டுமல்லாமல், அது சார்ந்த தொழில் செய்வோர், ஒப்பந்தத்தாரர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவு
இதன்பின் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
நீதிமன்றத்தை நாடிய தயாரிப்பாளர்
இதன்பின் அமலாக்கத்துறையின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தரப்பில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதிகாரிகள் வைத்த சீலினை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆகாஷ் பாஸ்கரன் வாதம்
இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், டாஸ்மாக் முறைகேடுக்கும், ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். அவரின் செல்ஃபோன்கள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார். தொடர்ந்து விக்ரம் ரவீந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியர் இல்லை.
சீல் வைக்க அதிகாரம் இருக்கிறதா?
ஆனாலும் அவரது வீடு, அலுவலகங்களில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதன்பின் நீதிபதிகள் தரப்பில், எதன் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது? விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்கள் எதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது? அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம், ஆவணங்களை கைப்பற்றலாம். சீல் வைப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
அமலாக்கத்துறை வாதம்
அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது அமலாக்கத்துறை தரப்பில், சோதனைக்கு சென்ற போது வீடு, அலுவலகம் பூட்டி இருந்ததால் சீல் வைக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுத்த போதும், ஒருமாதம் தலைமறைவாக இருந்துவிட்டு இப்போது உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்று வாதம் முன் வைக்கப்பட்டது.
ஜூன் 17க்கு ஒத்தி வைப்பு
அதற்கு நீதிபதிகள், வீடு பூட்டியிருந்தால் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பியதோடு, எதன் அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் இருவரையும் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளித்த உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 17ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications