மது விலக்கு பிரிவு என்ன செய்கிறது? கள்ளக்குறிச்சி வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி!
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை ஜனவரி ஆறாம் தேதி நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசுக்கு நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம், விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஷச் சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்தது தொடர்பாக சாராய வியாபாரிகள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கொடூர சம்பவம்: கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அனைவரின் வழக்கிலும் பதில் மனு தாக்கல் செய்து விட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீதிபதிகள் கேள்வி: அப்போது, எதன் அடிப்படையில் அனைவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பல ஆண்டுகளாக இவர்கள் கள்ளச்சாராயம் விற்று வந்ததாகவும் விஷச் சாராய மரணத்தால் மாவட்டம் முழுவதும் பதற்ற நிலை உருவானதாகவும் கூறினார்.
தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?: இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி ஆறாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷச்சாராய பலி சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் அமர்வு, சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்ற உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய கால தாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி வழக்கில் தமிழக காவல்துறை விசாரணையை முடித்துவிட்டது; சென்னை ஐகோர்ட் முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும், சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications