துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு.. காவல்துறைக்கு நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்திலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட விசாரணை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் பணியாற்றியிருந்தார். இந்த காலத்தில் ரூ.1.40 கோடி அளவுக்கு வருமானத்தை விட அதிகமாக பணம் ஈட்டியதாக துரைமுருகன் மீது கடந்த 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி என இருவரையும் விடுவித்து கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. வேலூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றம் கையில் எடுத்தது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற துரைமுருகன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்த வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கால அவகாசம் கேட்டிருந்தது. இதனையடுத்து விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.24ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications