"சீமை கருவேலம்.." நடவடிக்கை எடுங்க.. இல்லைனா நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும்- சென்னை ஐகோர்ட்
சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.
சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இங்கு மண்ணிற்கு சம்பந்தமே இல்லாத பல மரங்கள் உள்ளன. இதனால் இங்குள்ள சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாகச் சீமைக்கருவேல மரங்கள் மண்ணிற்கு அடியே இருக்கும் நீரை அதிகம் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் சீமைக்கருவேல மரங்கள் இருக்கும் பகுதிகளில் வேறு எந்த மரங்களும் வளர முடியாத சூழலே உள்ளது.

சீமைக்கருவேல மரங்கள்
மாநிலத்தில் பல இடங்களில் விறகிற்காக முதலில் கொண்டு வரப்பட்ட சீமைக்கருவேல மரங்களே, இப்போது அங்குப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அரசு வழக்கறிஞர்
அப்போது அரசுத்தரப்பில், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்தச் சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை எனவும், அப்புறப்படுத்த அரசு சாரா அமைப்புகள் முன்வரவில்லை எனவும், பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை எனவும் பருவமழை காரணமாகவும் இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யோசனை தெரிவித்த நீதிபதிகள்
அதனால் வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும், முன்னேற்றம் காட்டப்படும் எனவும் அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்கள் நோய் போலப் பரவுவதாகவும், அதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதியில் அத்தனை சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் எனப் பஞ்சாயத்துக்களுக்கு உத்தரவிடலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை
இறுதி வாய்ப்பாகப் பிப்ரவரி 14ம் தேதி வரை வழக்கைத் தள்ளிவைத்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். சீமைக்கருவேல மரங்கள் அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications