மதுரை விமான நிலையப் பெயர் மாற்றம்.. குறுகிய எண்ணத்துடன் பேசுகிறாராம் எடப்பாடி.. சொல்வது கிருஷ்ணசாமி!
திண்டுக்கல்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறுகிய எண்ணத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி பேசி இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவே அவரது ஆட்சிக் காலத்தில் இதுபற்றி பேசவில்லை என்று கூறியுள்ள கிருஷ்ணசாமி, இந்த பேச்சி தேவையற்றது என்றும் சாடியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு அதிமுக கொண்டு செல்லும்.

அதேபோல் தென் மாவட்ட மக்களின் நெஞ்சங்களில் வாழும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க அதிமுக கோரிக்கை வைக்கும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பின் பல்வேறு கணக்குகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு முக்குலத்தோர் சமூக மக்களின் ஆதரவு பெரியளவில் இல்லை.
இதற்கு அவர் 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்டார். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
அதற்கு கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளது. இதனை சரி செய்யும் நோக்குடன் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்களின் அடையாளமாக உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணசாமி பேசுகையில், ஒட்டுமொத்த மக்கள் நலன் சார்ந்து பேசாமல் குறுகிய எண்ணத்துடன் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது பற்றி பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவே அவரது ஆட்சி காலத்தில் இதுபற்றி பேசவில்லை. அவரது இந்த பேச்சு தேவையற்றது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications