அறுபட்ட மாஞ்சாவில் சிக்கிய கழுத்து.. துடித்தே இறந்த இளைஞர்.. லைவ் வீடியோவை கண்டு பதறிய சென்னை
சென்னை: சென்னை மதுரவாயல் பைபாசில் சென்ற இளைஞரின் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் தற்போது 6 பேரை கைது செய்துள்ளனர்.
கோடைக்காலம் வந்துவிட்டாலே பட்டம் விளையாட்டு களைக்கட்டிவிடும். சாதகமான காற்று, நின்ற இடத்திலிருந்தே விளையாடலாம், விளையாட்டை சுவாரசியமாக்க 'டீல்' அம்சமும் இருக்கிறது. எனவே சம்மர் சீசனில் பட்டம் விடுவது அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால் சிலர் 'டீல்' போடுவதில் வெற்றி பெற மாஞ்சா நூலை பயன்படுத்துகின்றனர். இந்த நூலை பயன்படுத்தி விடப்படும் பட்டமும் சில நேரம் அறுபட்டுவிடும். இப்படி அறுபட்ட பட்டத்தின் மாஞ்சா நூல் சாலைகளின் குருக்கே கம்பிபோல நீண்டுக்கொண்டிருக்கும். இதுதான் பைக்கில் செல்பவர்களுக்கு எமனாக மாறிவிடுகிறது.

வழக்கமாக எல்லா நூல்களிலும் பட்டம் தயாரிக்கப்பட்டாலும், மாஞ்சா எனும் வகை நூலில் பட்டம் தயாரிப்பது, அதில் பட்டத்தை பறக்க விடுவது 'கெத்தாக' பார்க்கப்படுகிறது. காற்றில் பறக்கும் எதிர் தரப்பினரின் பட்டத்தை எதிர்கொள்ளும்போது தங்களது பட்டத்தின் நூலால் அவர்களின் பட்டத்தின் நூலை அறுத்துவிட வேண்டும். சாதாரண நூல் எனில் தங்களுடைய பட்டத்தை இழக்க நேரிடும் என்பதால் மாஞ்சா எனும் நூலை கொண்டு பட்டம் பறக்கவிடப்படுகிறது.
உடைந்த கண்ணாடி+ஜவ்வரிசி சேர்ந்து கலவையாக்கி சாதாரண நூலில் பூசப்படுகிறது. இப்படியாக தயாரிக்கப்படும் நூல் மாஞ்சா நூல் எனப்படுகிறது. இதன் மூலம் விடப்படும் பட்டம் சாதாரண நூலில் விடப்படும் பட்டத்தை எளிதில் அறுத்துவிடும். இப்படி தயாரிக்கப்பட்ட பட்டம் ஒன்றுதான் கடந்த மார்ச் 8ம் தேதி சென்னையில் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. அதாவது சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் தனது தந்தையுடன் சேலையூரிலிருந்து கொளத்துருக்கு பைக்கில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் தொங்கிக்கொண்டிருந்த மாஞ்சா நூலில் இவரது கழுத்து சிக்கியிருக்கிறது.
இதனால் சம்பவ இடத்திலேயே சுருண்டுவிழுந்த சிவப்பிரகாசம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த இவரது தந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. இப்படி இருக்கையில், கடந்த 11ம் தேதி தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் இளைஞர் ஒருவர் பைக்கில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் தொங்கிக்கொண்டிருந்த மாஞ்சா நூல் இவரது கழுத்தை அறுத்துள்ளது.
உடனடியாக பைக்கை நிறுத்திய அவர் கழுத்தை தொட்டு பார்த்திருக்கிறார். அதில் ரத்தம் அதிக அளவு வெளியேறியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தை சோஷியல் மீடியாவில் 'லைவாக' பதிவு செய்துள்ளார். மேலும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி யார் இந்த வேலையில் ஈடுபட்டது என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் அடிப்படையில் மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விட்டதாக 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் கண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்மர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் இனி சென்னையில் மாஞ்சா நூல் 'சம்பவங்கள்' அதிக அளவில் நடைபெறும் என்பதால் காவல்துறையினர் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications