மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. இந்த மாதம் பெண்களுக்கு ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’.. தமிழக அரசின் சூப்பர் முடிவு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த மாதம் முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000, பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிவாக்கில் வரவு வைக்கப்படும் ரூ.1000 இந்த மாதம் 10 ஆம் தேதியே வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர்.

இன்னும் ஏராளமானோர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல் முறையீடு செய்தும், மேலும் பலர் புதிதாக விண்ணப்பித்தும் உள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களையும் பரிசீலித்து, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கியதால் நிதி நெருக்கடி இருப்பதால் ரொக்கப் பணம் வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். எனினும், பொங்கல் ரொக்கப் பணம் பற்றி திடீர் அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே ரூ.1,000 வரவு வைக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தேதி, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த ஆண்டு 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 19 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பாக 11, 12 ஆம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் வங்கிகள் விடுமுறை.
எனவே, ஜனவரி 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றே, மகளிர் உரிமைத்தொகைக்கான ரூபாய் 1000, அனைத்து பெண்களின் அக்கவுண்ட்களுக்கும் விடுவித்து விடலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில், இந்தப் பணம் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் காஞ்சிபுரத்தில் திமுக கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசு மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான நிதியை முறையாக கொடுப்பத்தில்லை என குற்றம்சாட்டிய அவர், அதனால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் இருக்கும் பயனாளிகளுக்கே ஆயிரம் ரூபாய் சரியாக கொடுக்க அரசு மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.
அரசு கஜானாவில் பணம் இல்லை என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். தகுதிவாய்ந்த பெண்கள் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் எண்ணம் என கூறிய அவர், விரைவில் தகுதி வாய்ந்த எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறி இருந்தார்.
அதேசமயம், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் 1.16 கோடி மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications