வந்துருச்சு மெசேஜ்.. கிளம்பிடுச்சு இந்து முன்னணி.. கோட்டைக்கு கோரிக்கை.. சர்ப்ரைஸ் தருமா தமிழக அரசு?
சென்னை: வருகிற 8ம் தேதி மகா சிவராத்திரி தினம் வருகிறது. இதையொட்டி இந்து முன்னணி முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறது. என்ன அது?
மகா சிவராத்திரி என்றாலே, இந்தியா முழுவதுமே இந்த மகா சிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி, வழிபடுவார்கள்... ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது கருதப்படுகிறது.. அதேபோல, அறிவியல் ரீதியாகவும் மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் உறங்காமல், நமது முதுகெலும்பை நேரே நிமிர்த்தி வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், இன்றைய தினம் இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிவதாக கூறப்படுகிறது.
மகாசிவராத்திரி: அந்தவகையில், ஈஷாவில் 30ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு 8ம் தேதி பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்:
இந்துக்கள்: "இப்பூவுலகின் ஆதியும், அந்தமுமான எல்லாம் வல்ல ஈசனை தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலுமுள்ள இந்துக்கள் ஏன் வெளிநாட்டவர் கூட போற்றி வணங்கிடும் மஹா சிவராத்தரி விழா, வரும், 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் பக்தர்கள் சிவபெருமானை நினைந்து இரவு முழுக்க விழித்து, விரதமிருந்து, உடலையும், மனதையும் செம்மையாக்கிட கொண்டாடப்படும் விழா மகா சிவராத்தரி.
சிவபெருமான்: குமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழாவினை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் என்ற பெயரில், 110 கி.மீ., துாரமுள்ள, 11 சிவாலயங்களுக்கு ஆண்கள், பெண்கள் குழந்தைகளென ஓடிச்சென்று சிவபெருமானை வழிபடுவர். இவ்விழா சிவாலய ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
தென் மாவட்ட பகுதிகளில் சிவராத்திரி திருநாளில், சொந்த ஊரை விட்டு வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்த தமிழர்கள் குலதெய்வ கோவில்களில் ஒன்றிணைந்து, திருவிழா கொண்டாடி, மகிழ்ந்து, நமது பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு முறையை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஹிந்துக்களின் பண்பாட்டு விழா சிவராத்திரி.
விடுமுறை: கோவை அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும், இத்திருவிழா வெகு விமரிசையாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் ஆன்மீக அமைப்புகளும், திருமடங்களும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றன. ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளுக்காக, 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளன.
தமிழகத்திலும் கூடஎந்தவொரு சிரமமுமின்றி சிவாலயங்களும், குல தெய்வ கோவில்களுக்கும் சென்று இறைவனை தரிசித்திட மஹா சிவராத்திரி திருநாளான வரும், 8ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும். இதுதவிர, பக்தர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக, 7, 8 மற்றும் 9 ஆகிய, மூன்று தினங்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications