“மகாவிஷ்ணுவை நாங்க தான் வளர்த்தோம்.. படிக்கும்போதே இந்த வழியில போய்ட்டார்”.. தாத்தா, பாட்டி பேட்டி!
சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக வகுப்பு எடுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே, மகாவிஷ்ணுவின் தாத்தா, பாட்டி ஆகியோர் மகாவிஷ்ணு பற்றி பேசியுள்ளனர்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை உரையாற்ற வந்த பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்தும் மனிதர்களின் மறு ஜென்மம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு அப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் பரவிய நிலையில், மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். பள்ளியில் இதுபோன்ற ஆன்மீகம் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது தவறு என்றும் கூறி வருகின்றனர். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல், மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று கூறியிருந்தார்.
யார் இந்த மகாவிஷ்ணு?: மகாவிஷ்ணுவின் தந்தை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி. தாய் பரமேஸ்வரி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டியைச் சேர்ந்தவர். அலங்காநல்லூரில் 1994 ஆம் ஆண்டு பிறந்த மகாவிஷ்ணு, தமது தாய் வழி தாத்தா பாட்டி வீட்டிலேயே தங்கி பள்ளிப் படிப்பை படித்துள்ளார்.
தாத்தா பால்சாமி, பாட்டி பெருமாளம்மாள் ஆகியோர் தான் மகாவிஷ்ணுவை சிறுவயது முதல் வளர்த்துள்ளனர். தாத்தா பால்சாமி தான், தனது பேரனுக்கு மகா விஷ்ணு என பெயர் வைத்தாராம். சிறுவயதில், முன்னணி தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார் மகாவிஷ்ணு.
ஸ்டாண்ட் அப் காமெடியன்: தனது பேச்சுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் கிடைத்ததை தொடர்ந்து, கொரோனா காலகட்டத்தில் யூடியூபில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார் மகாவிஷ்ணு. பின்னர் தன்னை ஒரு ஆன்மீக பேச்சாளராக மாற்றிக்கொண்டுள்ளார் மகாவிஷ்ணு. கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி ஆன்மீக தேடலுக்கான வழிகாட்டுவதாக கூறி கட்டண வகுப்புகளை நடத்தியுள்ளார்.
ஆன்மீக சொற்பொழிவாளராக மாறிய மகா விஷ்ணு ஸ்ட்ரெஸ் ஃப்ரீ என்ற பெயரில், ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும், குருவின் கருணை என்ற பெயரில், ருத்திராட்சம், கருங்காலி, விநாயகர் சிலை உள்ளிட்ட பொருட்களை ஆன்லைன் வாயிலாக உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.
அமைச்சர்களுடன்: ஏழை எளிய மாணவர்களின் படிப்புக்கு உதவுவதாக கூறி, பள்ளிகளுக்கு நிதி உதவிகள் செய்வது, பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மேலும், பள்ளி பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வலியுறுத்தி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மனோ தங்கராஜ், மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோரை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தான், சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றி உள்ளார் மகாவிஷ்ணு. அரசுப் பள்ளியில் ஆன்மீக தேடல் பற்றி பேசியதன் காரணமாக சர்ச்சையில் சிக்கி தற்போது, போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.
மகாவிஷ்ணுவின் தாத்தா, பாட்டி பேட்டி: இந்நிலையில், மகாவிஷ்ணுவின் தாத்தா பாட்டி ஆகியோர் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர். மகாவிஷ்ணுவின் தாத்தா பால்சாமி கூறுகையில், "என் மகள் வழிப் பேரன் அலங்காநல்லூரில் பிறந்து எங்களிடம் தான் வளர்ந்தான். படித்துக் கொண்டிருந்தவன் இந்த வழியில் போயிருக்கிறான்." எனத் தெரிவித்துள்ளார்.
"என் பேரன் மகாவிஷ்ணுவை நாங்கள் தான் வளர்த்தோம். அலங்காநல்லூர் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தோம். பிறகு திருப்பூரில் போய் அங்கேயே செட்டிலாகி விட்டார். அவருக்கு இப்போது அப்பா இல்லை. தாய், தங்கச்சியோடு அங்கே இருக்கிறார் மகாவிஷ்ணு. நாங்கள் அவ்வப்போது போய் பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார் மகாவிஷ்ணுவின் பாட்டி பெருமாளம்மாள்.












Click it and Unblock the Notifications