ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்... மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஹசீனா சையத் நிவாரண உதவி
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மகிளா காங்கிரஸ் தேசியச்செயலாளர் ஹசீனா சையத் வழங்கினார்.
Recommended Video
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி பெற்று குடும்பத்தை நடத்தி வந்த லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஹசீனா சையத் சென்னை வளசரவாக்கம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விநியோகித்து வருகிறார். இதேபோல் அப்பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், சோப், மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை அவ்வப்போது கொடுத்து உதவுகிறார்.

இதனிடையே அத்தியாவசிய பொருட்கள் மட்டுமன்றி, வளசரவாக்கம், போரூர், உள்ளிட்ட பகுதிகளில் இரவல் பெறுவோருக்கும், ஆதரவற்ற நிலையில் சாலையில் வசிப்பவர்களுக்கும் உரிய அனுமதியுடன் உணவு தயார்செய்து அதனை விநியோகம் செய்கிறார் ஹசீனா சையத். மேலும், நிவாரண உதவிகள் பெற வந்தவர்களில் ஒரு சிலர் மருந்துகள் வாங்க முடியாமல் சிரமப்படுவதாக கூறியதை அடுத்து, அவர்கள் மருந்துகள் வாங்குவதற்கு உரிய தொகையை கொடுத்து உதவினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நிவாரண உதவிகள் வழங்கி வரும் நிலையில், தற்போது மகிளா காங்கிரஸும் களத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications