தவெக வருகையால் மொத்தமாக சரிந்த நாதக? தமிழகம் முழுவதும் டெபாசிட் காலி! அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்!
சென்னை: இந்த முறை சட்டசபைத் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெல்ல முடியும் என்று நம்பிக்கையுடன் எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மாநிலம் முழுக்க அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நாதக வேட்பாளர்கள் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர்.
தமிழக அரசியலில் தனி வழி எனச் சொல்லி எல்லா தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடும் கட்சி நாம் தமிழர். சீமான் தலைமையிலான நாதக இதுவரை தான் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வந்துள்ளது. இதுவரை நாம் தமிழர் கட்சி எந்தவொரு இடத்திலும் வென்றதே இல்லை. ஆனால், இந்த முறை அந்த வரலாற்றை மாற்றிவிட முடியும் என நாதகவினர் பெரிதும் எதிர்பார்த்தனர்.

நாம் தமிழர்
குறைந்தபட்சம் காரைக்குடி தொகுதியில் சீமான் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இந்த 2026 தேர்தல் முடிவுகள் மிகப் பெரிய 'ஷாக்' வைத்தியமாக அமைந்துள்ளன. மாநிலம் முழுக்க தனி ஆளாக நாதகவுக்காக பிரச்சாரம் செய்த சீமானின் அரசியல் பயணம், இந்தத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
சீமான் 4வது இடம்
குறிப்பாக, காரைக்குடி தொகுதியில் களம் கண்ட சீமான், டெபாசிட் கூடப் பெற முடியாமல் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டது நாதக தம்பிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரைக்குடி களத்தில் தவெக வேட்பாளர் பிரபு 1.01 லட்சம் வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் 55 ஆயிரம் வாக்குகளையும், அமமுக வேட்பாளர் 33 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஆனால், சீமான் வெறும் 30 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று, தனது டெபாசிட்டையும் இழந்துள்ளார்.
அனைவரும் டெபாசிட் இழந்தனர்
இதில் விஷயம் என்னவென்றால் நாம் தமிழர் கட்சி மாநிலத்தில் உள்ள எல்லா தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது. அதில் பல தொகுதிகளில் கடும் போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நிலைமை அதற்கு நேர்மாறாக போனது. எல்லா இடங்களிலும் நாதகவின் கணிசமான வாக்குகள் அப்படியே தவெக பக்கம் போனது. இதனால் காரைக்குடியில் சீமான் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுமே டெபாசிட் இழந்தனர்!
என்ன காரணம்!
விஜய் வருகையே நாதகவின் இந்த படுதோல்விக்கு காரணமாக இருக்கிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்று 'மாநிலக் கட்சி' என்ற அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்த நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலில் 4 சதவீதத்திற்கும் கீழ் சுருங்கியுள்ளது. இதனால், மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாதக கடந்து வந்த பாதை
2010-ல் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.7 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன்பிறகு 2019ல் 3.9 சதவீதமும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இறுதியாக 2024ல் 8 சதவீதத்தை எட்டிப் பிடித்துத் தமிழகத்தின் 3-வது பெரிய வாக்கு வங்கியாக உருவெடுத்தது. ஆனால், இப்போது அந்த பிம்பம் தவிடுபொடியாகியுள்ளது.
எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வளர்ந்த நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலில் தவெக போன்ற புதிய சக்திகளின் வருகையாலும், இளைஞர்களின் வாக்குகள் பிரிந்ததாலும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 2021ல் இருந்த அந்த 3-வது இடம் என்ற கௌரவம் இப்போது பறிபோய் உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. இதைச் சமாளிக்க சீமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதே இப்போது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications