மறுதேர்தல் நடத்த வேண்டும்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்! ம.நீ.ம. திடீர் போர்க்கொடி!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறு தேர்தல் நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது எனவும் போராட்டத்தின் போது கண்ணில் கருப்புத்துணி கட்டி முழக்கங்கள் எழுப்பினர்.
மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம், அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஸ்நேகா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு மறுதேர்தல் நடத்தக்கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரமான மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் அதிகளவில் கள்ள ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

சிசிடிவி காட்சிகள்
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பினர். கண்ணில் கருப்புத்துணி கட்டியவாறு மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய திடீர் முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

2 பேருக்கு மட்டும் அனுமதி
பிறகு ஒரு வழியாக தேர்தல் ஆணையரை சந்தித்து முறையிட 2 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்ற காவல்துறையினரின் கட்டுப்பாட்டை ஏற்று மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகமும், மநீம மகளிர் அணி நிர்வாகி ஸ்நேகா மோகன் தாசும் அவரை சந்தித்து தங்கள் புகாரை முறையிட்டனர். தேர்தல் முடிந்து 24 மணி நேரம் கூட நிறைவு பெறாத நிலையில் மநீம வினர் நடத்திய இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் நேரம்
ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலின் போதும் இது போன்ற புகார்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து வரும் என்பதால் அதனை எதிர்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் தயாராகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த முறை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு உரிய விளக்கம் தர தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.












Click it and Unblock the Notifications