ஒருமையில் பேசுவதா? சீமானுக்கு மநீம மகளிரணி கடும் கண்டனம்
சென்னை : மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் - பாரதியின் வரிகளைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றாண்டுகளைக் கடந்தும் மாதர்களைச் சீரழிக்கும் மடமைகள் தொடர்வது கொடுமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ அண்மையில் வெளியானது. இதனையடுத்து பாஜக பொதுச்செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்.. அவரை வீடியோ எடுத்ததுதான் குற்றம்.. அந்த நபரைத்தான் கைது செய்திருக்க வேண்டும் என்றார்.
சீமானின் இந்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜோதிமணி தமது அறிக்கையில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது.

அதிர்ச்சி அளிக்கிறது
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது என ஜோதிமணி எம்பி கூறினார்.

சீமான் பேச்சு
ஜோதிமணியின் இந்த கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், ஜோதிமணி இவ்வளவு பேச வேண்டியது இல்லை.. ரொம்ப கஷ்டமா இருந்தா விஷம் குடிச்சு செத்துப் போ என ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு தான் மக்கள் நீதி மய்யம் மாதர் படை மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : பல்வேறு சமூகத் தடைகள் காரணமாக, பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் சேவை செய்ய முன்வரும் மாதர்களின் சதவிகிதம் ஏற்கனவே மிகக்குறைவு.
இப்படிப்பட்ட சூழலில், துணிந்து அரசியல் களத்திற்கு வந்த மகளிருக்கு பாலியல் தொந்தரவு தரும் அரசியல்வாதிகள் ஒரு புறம்; அப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்களுக்கு ஆதரவுக் குரல்கொடுப்பதோடு பெண்களுக்காகக் குரல் எழுப்பும் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை 'செத்துப் போ' என்று பொதுவெளியில் கூறும் அரசியல் தலைவர் மறுபக்கம், இவையெல்லாம் மகளிரை இழிவுபடுத்தும் செயலென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. பெண்களின் சுதந்திரச் சிறகொடிக்கும் இதுபோன்ற கொடுமைகளை மய்யம் மாதர்படை வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் இப்படியென்றால் நாட்டின் தலைநகரிலும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றன! டெல்லியில் . ரபியா சைஃபி என்ற இளம் பெண் காவலர், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
Recommended Video

மய்யம் மாதர்படை
தொடரும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களைத் துரிதமாக விசாரித்து, இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மிக விரைவில் !!. காலத்திற்கேற்ற சட்டங்கள், சமூகவிழிப்புணர்வின் இக்கொடுமைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டுமென மய்யம் மாதர்படை கண்டனக் குரலோடு கோருகிறது.

உரிமைகள்
வீரம் எனப் பொருள்படும் ஆண்மை, மாதரை அடிமைப்படுத்தவோ அவர்களைச் சீரழிக்கவோ கொடுக்கப்படும் உரிமைப் பத்திரம் அல்ல என்பதை ஒவ்வொரு ஆணும் உணர வேண்டும். கருவிலேயே சிதைக்கப்படும் கொடுமைக்கு எதிராகப் போராடிப் பிறந்து, இறப்புவரை எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டு வாழும் மரியாதைக்குரிய மகளிரின் கண்ணியம் காக்கப்பட, உரிமைகள் வென்றெடுக்கப்பட மக்கள் நீதி மய்யம் என்றும் குரல் கொடுக்கும் " இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,












Click it and Unblock the Notifications