மலேரியா அதிகாரி டூ இயக்குநர் இமயம்! பாரதிராஜாவின் நிஜ முகம்; தம்பி உடைத்த உண்மை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜா இன்ஜினியராக வேலைக்குப் போய்ச் சேர்ந்து, அங்கே தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் திரும்பி வந்த கதையை அவரது தம்பி உணர்ச்சிகரமாகத் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் இமயம் என்று தமிழ்த் திரை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. கரகரப்பான தனது வசீகரமான குரலால் என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்று ஒரு வாசகத்தை வைத்து உலகம் முழுக்க உள்ள தமிழ் மனங்களில் இடம்பெற்றவர். அவர் இன்று தனது 83 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

Bharathiraja Kamal Haasan

அவரது பிறந்தநாள் பற்றி நடிகர் கமல்ஹாசன், "கிராமத்துக் குழந்தையாக உலகத்தைப் பார்த்தவர், கிராமங்களை இந்த உலகுக்கே காட்டினார். இனிய தமிழ் மக்களில் இருந்து அனைத்துத் தரப்பு சினிமா ரசிகர் மனதின் செல்லப்பிரதேசங்களிலும் தனது திரைப்படங்களால் இடம்பிடித்த பாரதிராஜாவுக்கு பிரியத்தோடு பிறந்த நாள் வாழ்த்து. " என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் இதுவரை அவரது அண்ணனைப் பற்றி தெரியாத அபூர்வமான தகவல்களை ஒரு யூடியூப்க்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜெயராஜ் பேசுகையில், "அப்பா ஆரம்பக் காலத்தில் தேனியில்தான் குடியிருந்தார். அங்கேயே லாரி புக்கிங் ஆபீஸ் நடத்தி வந்தார். தொழில் நல்லபடியாக நடைபெற்று வந்த சூழலில், திடீரென்று 1950கள் இருக்கும் என்று நினைக்கிறேன். தொழிலில் திடீரென்று ஒரு சறுக்கல் ஏற்பட்டது. பொருளாதார ரீதியாக குடும்பம் வறுமையில் சிக்கியது. ஆகவே, தேனியிலிருந்த வீட்டை விற்பனை செய்து விட்டு, அல்லிநகரம் போய் குடியேறினோம். அந்தக் காலத்தில் அப்பா அந்த வீட்டை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார்.

Bharathiraja Kamal Haasan

அல்லிநகரம்தான் பூர்வீகம். எங்கள் தாத்தாவுக்கு நிறைய விவசாய நிலங்கள் இருந்தன. இங்கு வந்த பிறகு விவசாயம்தான் எங்களின் தொழிலானது. அப்பாவுக்கு விவசாயம் தெரியும். 'மண்வாசனை' படத்தில் அப்பா ஏர் உழுவதைப் போல ஒரு காட்சியை பாரதிராஜா பின்னாளில் வைத்திருந்தார். கூடவே அந்தக் காட்சியில் என் அம்மா களை எடுக்கும் காட்சியும் வரும். பாரதிராஜாவுக்கும் எனக்கும் கூட விவசாயம் பற்றி அப்போது ஒன்றும் தெரியாது. நான் அப்போது 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் 7-ம் வகுப்பு. இருவரும் சின்ன வயது.

அவருக்கு7 ஆம் வகுப்பு படிக்கும் போதே கலை மீது ஆர்வம் வந்துவிட்டது. அவர் நாடகம் போட்டால் அவ்வளவு கூட்டம் கூடும். சின்னசாமி நாடகம் போட்டால் கூட்டம் கூடும் என்று பள்ளிக்கூடத்திலேயே பசங்கள் பேசிக் கொள்வார்கள். அக்கா நன்றாகப் பாடுவார். நானும் நன்றாகப் பாடுவேன். குடும்ப வறுமையால் பத்தாம் வகுப்பு மேல் ராணுவத்தில் ஆள் சேர்க்கிறார்கள் எனக் கேள்விப்பட்டு பெரியகுளம் சென்றுவிட்டேன்.

அந்தக் காலத்தில் 25 பைசா டிக்கெட். போன என்னைத் தேர்வு செய்துவிட்டார்கள். உடனே அடுத்த வாரமே மதுரைக்கு மெடிக்கல் டெஸ்ட் வரவேண்டும் என்றார்கள். அப்போது மத்திய அரசின் மலேரியா தடுப்பு பிரிவில் பாரதிராஜா வேலை பார்த்தார். அப்படி அதிகாரியாக இருக்கும்போதுதான் அவர் தேனி முழுக்க பல ஊர்களுக்குப் போய் ஆய்வு செய்தார். அப்படித்தான் இளையராஜா நட்பு கிடைத்தது.

ராணுவத்தில் சேருவதற்காகப் பெரியகுளம் போன என்னிடம் திரும்பி வரக் கையில் பணம் இல்லை. வைத்திருந்ததே 25 பைசாதான். ஆகவே அங்கிருந்து அல்லிநகரத்திற்கு நடந்தே வந்து சேர்ந்தேன். ஊருக்கு வந்த எனக்கு மதுரை போகப் பணம் இல்லை. அதனால் ஊரில் உள்ள அரவை ஆலையில் இரவு நேரத்தில் வீட்டுக்குத் தெரியாமல் வேலை செய்தேன். அந்தப் பணத்தை வைத்து மதுரைக்கு மெடிக்கல் டெஸ்ட்க்கு போய்விட்டேன். பிறகு கண் டெஸ்ட்டுக்கு திருச்சி அழைத்தார்கள். அதிலும் வெற்றி. கடைசியாக ராணுவத்தில் சேர்ந்தேன். வேலை கிடைத்ததும் ஹைதராபாத் அழைத்துப் போனார்கள். 3 ஆண்டுகள் காஷ்மீரில் வேலை பார்த்துவிட்டு ஆவடிக்கு வேலை மாறுதல் கிடைத்து வந்தேன்.

Bharathiraja Kamal Haasan

அண்ணன் மெட்ராஸ் இன்ஜினியர்ஸ் மத்திய அரசு கம்பெனியில் ஆள் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் அங்கே வேலைக்குப்போய்விட்டார். அவரை பெங்களூருக்கு அழைத்துப் போய்விட்டார்கள். அங்கே போனதும் தலையில் உள்ள முடியை ஒட்ட வெட்டி விட்டார்கள். வேலையும் அதிகம். அவரால் தங்க முடியவில்லை. உடனே வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பிவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் மத்திய அரசு அதிகாரிகளைப் பார்த்து முறையிட்டனர். அப்புறம் அவரை வேலையிலிருந்து விடுவித்தார்கள்.

ஊருக்குத் திரும்பிய காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தேதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அவரிடம் அண்ணன் நாடகம் போடும் கதையை எல்லாம் ஊர் ஜனங்கள் எடுத்துச் சொன்னார்கள். அவர் பாரதிராஜாவைச் சென்னை வந்து தன்னை சந்திக்கச் சொன்னார். அதைவைத்து அண்ணன் 1963இல் சென்னைக்குப் போனார். அம்மா தான் காதில் உள்ள கம்மலை விற்று பணம் கொடுத்து மெட்ராஸ் அனுப்பினார். மெட்ராஸ் வந்த அண்ணன், எஸ்.எஸ்.ஆர் வீட்டுக்கு அவரைப் பார்க்கப் போனால், அங்கே உள்ள வாட்ச் மேன் அவரை உள்ளேயே விடவில்லை.

அதன்பின்னர் வாஹினி ஸ்டுடியோ எதிரே அந்தக் காலத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். நான் அப்போது ஆவடி ராணுவ முகாமில் வேலை பார்த்து வந்ததால் சனி, ஞாயிறு அண்ணனைப் பார்க்க வருவேன். அப்போது மெஜஸ்டிக் ஸ்டுடியோ பக்கம் மதுரை மீனாட்சி ஹோட்டல் மாடியில் பாரதிராஜா அறை எடுத்துத் தங்கி இருந்தார்.

ஊரில் மலேரியா நோய்த் தடுப்பு அதிகாரியாக இருந்தபோது அண்ணனின் நாடகத்திற்குப் பாவலர் வரதராஜன் தான் இசையமைப்பார். ஒருமுறை அவர் ஊருக்குப் போய்விட்டார். அதைக் காரணமாக வைத்து இளையராஜாவை நாடகத்திற்கு மியூசிக் போட வைத்தார் அண்ணன். அப்போது இருந்தே ராஜா மீது அண்ணனுக்கு ஒரு மரியாதை. ராஜா நாடகத்திற்கு இசையமைத்தால் கூட்டத்தில் விசில் சத்தம் பறக்கும். அப்படி மியூசிக் போடுவார் ராஜா" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+