இலங்கையை விடுங்க.. மாலத்தீவு செய்த வேலையை பாருங்க.. தமிழக மீனவர்கள் கைது.. ஸ்டாலின் அவசர கடிதம்
சென்னை: மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் 23-10-2023 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் தனது கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மீனவர்களை கைது செய்வதையும், படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை தான் வாடிக்கையாக கொண்டிருக்கும். இந்நிலையில் மாலத்தீவு கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகள் உட்பட உடைமைகளை பறிமுதல் செய்து வைத்திருப்பது மீனவ சமுதாய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications