பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதியாம்.. சென்னையில் சர்ச்சையில் சிக்கிய கார்கே.. பாஜக எதிர்ப்பால் புதுவிளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைந்தது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடியை பயங்கரவாதி என கூறியதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதோடு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி பயங்கரவாதி என்று கூறவில்லை என மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. நாளை மறுநாள் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது.

mallikarjun-kharge-remarks-on-pm-modi-and-called-terrorist-now-clarifies-after-bjp-slams

முன்னதாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடி பற்றி கூறிய கருத்து சர்ச்சையானது.

மோடியை பயங்கரவாதி என..

பத்திரிகையாளர் சந்திப்பின்போது மல்லிகார்ஜூன கார்கே, ''எப்படி அவர்கள் (அதிமுக) மோடியுடன் சேருவார்கள்? அவர் (மோடி) ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவம் மற்றும் நீதியை நம்புவதில்லை. இதனால் அவர்களுடன் இணைவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும்'' என்றார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.

கொந்தளித்த பாஜகவினர்

நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமராக உள்ளார். இப்படியான சூழலில் அவரை மல்லிகார்ஜூன கார்கே, பயங்கரவாதி என கூறியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மத்திய அமைச்சரும், தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ''காங்கிரஸ் இவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்பது வெட்கக்கேடானது. மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை பயங்கரவாதி என்று அழைக்கிறார்கள். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கார்கேவின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரதமர் மற்றும் நாட்டு மக்களை அவமதித்ததற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை 'அட்டாக்'

அதேபோல் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ''நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மன்னிக்க மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களித்து தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்ததால்தான் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு எதிராக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். பிரதமர் மோடியை பயங்கரவாதி என்று நேரடியாக அழைத்த மல்லிகார்ஜூன கார்கே பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அமித் மாளவியா விமர்சனம்

அதேபோல் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ''இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவரை மோசமாக பேசுவதிலும், இழிவுபடுத்துவதிலும் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் நரேந்திர மோடியை 'பயங்கரவாதி' என்று அழைப்பது மற்றொரு தரம்தாழ்ந்த செயல். கார்கே அரசியல் விவாதத்தை இவ்வளவு தரம் தாழ்ந்து கொண்டு செல்வது இது முதல் முறையல்ல'' என கண்டித்துள்ளார்.

கார்கே தந்த விளக்கம்

இந்த எதிர்ப்பை தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்துள்ளார். அதில் பிரதமர் மோடியை தான் ஒருபோதும் பயங்கரவாதி என சொல்லவில்லை என்றும், பாஜகவினர் தனது பேச்சை திரித்து பரப்புவதாகவும் கூறியுள்ளார்.

அந்த விளக்கத்தில் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி எங்களை எப்போதும் மிரட்டுகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் அவரது கைகளில் உள்ளன. நான் அவரை (மோடி) பயங்கரவாதி (Terrorist) என்று சொல்லவில்லை. அவர் அச்சுறுத்துகிறார் (Threatens) என்றே சொன்னேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+