மாமன்னன்.. திராவிட ஆட்சிகளில் நிலவும் சாதி அரசியலை அப்பட்டமாக காட்டியுள்ளதாம்! இப்படியும் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம், திராவிட ஆட்சிகளில் நிலவும் சாதி அரசியலை அப்பட்டமாக காட்டியிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் தளத்தில் Ravanan Ambedkar எழுதியுள்ள மாமன்னன் திரைப்படம் குறித்த விமர்சனம்:
திராவிட ஆட்சிகளில் நிலவும் சாதி அரசியலை அப்பட்டமாக படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். அரசியல், அதிகாரம், மரியாதை என பல சிடுக்குகளில் பட்டியல் சாதி சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட கட்சிகளின் கீழ் வெறும் கோவில் மாடுகளாக நடத்தப்படுவதையும் அதை எதிர்த்து கிளம்பும் இளைய தலைமுறையையும் காட்சிப் படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக இடைவேளையை நோக்கி நகர்த்துவதாகட்டும் முன்கதை பின்கதை என நகர்வதாகட்டும் மிக நேர்த்தியாக திரைக்கதையை பின்னியிருக்கிறார்.

இந்த படத்தை முழுவதுமாக தாங்கிப் பிடிப்பது வடிவேலு மட்டுமே. ஒரு பட்டியல் சாதி அரசியல்வாதியாக, தொண்டனாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறி சட்ட மன்ற உறுப்பினரான பின்னும் அவரை துரத்தும் சாதியும் தீண்டாமையும் என பெரும் கனத்தை அநாயசமாக சுமந்து இருக்கிறார். கதாப்பாத்திரமாகவே வாழக் கூடிய வெகு சில நடிகர்களில் ஒருவரான அவருக்கு இது பெரிய சுமையில்லை. இது போன்ற தெறிப்புகள் அவரது பல முந்தைய படங்களில் இருந்தாலும் இதில் முழுவதுமாக வாழ்ந்து தீர்த்து விட்டார். அதிலும் இடைவேளைக்கு பிறகு மகனின் சொல்கேட்டு சுயமரியாதையை மீட்டெடுக்கும் பொழுது அவர் உடல்மொழியில் கொண்டு வரும் மாற்றத்தை எல்லாம் திரை நடிகர்களுக்கு பாடமாகவே வைக்கலாம். அவர் இருக்கும் தைரியத்திலோ என்னவோ உடன் நடித்த எல்லோருமே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ஒரு நல்ல நடிகராக உருவாகி விட்ட உதயநிதிக்கு இது கடைசி படம் என்பது தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு.
அடுத்த பலம் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான். உயிரை கொடுத்து இசைத்திருக்கிறார். ஏற்கனவே பழகிய இயக்குநர்களோடு அல்லாமல் இது போன்ற புதிய முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அவர் தம் படைப்பின் உச்சத்தை தொட முடியும் என்பது மீண்டும் நிரூபனமாகிறது. பின்னனி இசையில் பிரித்து மேய்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று எல்லோருமே தத்தமது பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். இரண்டாம் பாதி திரைக்கதையில் தேர்தல் வெற்றி என்பதை தாண்டி கொஞ்சம் புதுமையாக யோசித்து இருக்கலாம் என்பது ஒரு குறையென்றாலும் ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியலை மையமாக கொண்ட படத்தில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
பட்டியல் சாதியினர் தங்கள் அரசியலை எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கு இத்திரைப்படம் நீண்டநாட்களுக்கு ஒரு கையேடாக இருந்து செயல்படப் போகிறது என்பதற்காகவே பாராட்டுவோம். உதயநிதி, கமல்ஹாசன் போன்றோரும் இது தங்களது அரசியல் என்று ஏந்திக் கொண்டது சமூக மாற்றத்திற்கான நல்ல அறிகுறி. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இயக்குனர் மாரி செல்வராஜ் வெற்றி பெற்று விட்டார்.தேவர் மகன் காட்டிய சாதிப் பெருமித உலகத்திற்கும் அதன் ஓரத்தில் வாழ நேர்ந்த பட்டியல் சாதி மக்களின் உலகிற்குமான இடைவெளியை காட்டுவதலேயே இந்த படம் அதற்கு எதிர்நிலையில் நிற்கிறது. இயல்பாகிப் போன சாதிப் பெருமிதங்களின் இடையே எனது இடம் என்ன என்பதுதான் மாமன்னன் எழுப்பும் காத்திரமான கேள்வி. எங்களை அடித்து வழிக்கு கொண்டு வருவது அல்லது அரவணைத்து பத்திரமாக பார்த்து கொள்வது என இரண்டுமே உங்களின் சாதிப் பெருமிதமாகவே பரிணமிக்கறது. அப்படியெனில் எங்களுக்கான சுயம் என்ன என்கிற தேடல்தான் மாமன்னன். தமிழ் திரையில் மதுரைவீரனை தவிர்த்து இதுவரைக்கும் காட்சிப்படுத்தப்படாத அருந்ததியர்களை முன்வைத்து இந்த கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர்.
நாம் இங்கே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் நகர்வையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அருந்ததியர் சாதியை சேர்ந்த திரு,தனபால் அவர்களை கொங்கு மண்டல சாதி வெறியினர் எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நடத்தினர் என்பதை தெரிந்து கொள்கிறார் அவர். தனபால் அவர்கள் கட்சிக் கூட்டம் அல்லது விருந்து என்று அழைத்தால் அவரை புறக்கனிக்கும் தம் சொந்த கட்சியினருக்கே பாடம் புகட்ட அவரை சபாநாயகராக்கி தாம் உட்பட எல்லோரும் அவர் முன்னே எழுந்து நின்று மரியாதை செலுத்தும் படி செய்தார். அதுதான் திராவிட அரசியலின் அடிநாதம் என்று தெளிவுடனே செய்தார். வருங்கால முதல்வர் உதயநிதி அவர்கள் அந்த திசையில் நடக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாம் மீண்டும் படத்திற்கு வருவோம். பட்டியல் சாதியில் இருந்து திராவிட கட்சிகளில் ஒரு தொண்டனாக தம் அரசியல் வாழ்வை தொடங்கும் ஒருவனது நிலை என்ன என்பதை சிந்திப்போம். அவர் குறைந்தபட்சம் தம் சொந்த சாதியினரிடம் செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும். அவர்களை தாம் சொல்லும் கட்சிக்கு வாக்கு செலுத்த வைக்கும் வல்லமை பெற்றவராக இருக்க வேண்டும். அதைத் தாண்டி அவருக்கு தேவையானது என்றால் ஊர் சாதி பெரியவர்களுடன் இணக்கமான உறவு இருக்க வேண்டும். இணக்கம் என்றால் சமமல்ல அவர்கள் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் உத்தரவுகளை கேட்டு நடக்க வேண்டும். இதுதான் ஒரு பட்டியல் சாதி அரசியல்வாதிக்கான வரையறை.
பட்டியல் சாதியினரால் தனித்து எந்த தொகுதியிலும் வென்று விட முடியாது என்பதாலேயே ஊர் சாதி இந்துக்களின் வாக்கு கிடைக்க வேண்டுமெனில் அவர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு வாழ வேண்டும். இதனால்தான் பாபாசாகேப் தனி வாக்கு தொகுப்பு அல்லது இரட்டை வாக்குரிமை கேட்டு போராடினார். (இரட்டை வாக்குரிமை குறித்த என் பழைய பதிவுகளை தேடி படித்து விடுங்கள்)
இப்படி இருக்கும் நிலையில் தனித்து எதுவுமே செய்து விட முடியாத பட்டியல் சாதியினரில் மிகவும் பலகீனமானவர்களை தேர்ந்தெடுத்து தங்கள் சொல்படி ஆடுபவர்களை தனித் தொகுதி வேட்பாளர்களாக்குவதுதான் வழமையான வாக்கரசியல். எதிர்த்து தங்கள் உரிமைகளை பேசுபவர்களுக்கு அங்கே எந்த இடமுமில்லை. அப்படி உருவாகி வந்தவர்தான் மாமன்னன். மனதிற்குள் எவ்வளவு புழுக்கமிருந்தாலும் அவற்றையெல்லாம் மென்று விழுங்கி விட்டு இந்த இடத்தில் தம் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்து விட முடியாதாவென ஏங்கும் ஒரு சாதாரண ஆள். இவர்களை அண்ணல் அம்பேத்கர் தலையாட்டி மாடுகள் என்று குறிப்பிடுகிறார். உடனடி இலாபங்களுக்காக நீண்ட கால நோக்கில் பட்டியல் சாதி மக்களின் எழுச்சிக்கும் உயர்வுக்கும் தடையாக இருப்பவர்கள் என்கிறார்.
அப்படி மாடாக மண்ணுவாக இருந்தவரை மாமன்னனாக(வடிவேலு) அடையாளப்படுத்துபவராக அவரது மகன் அதிவீரன்(உதயநிதி) இருக்கிறார். அருந்ததியர் சாதி மக்களின் உட்பிரிவான பகடை எனும் போர்குடியின் ஆதி வீரத்தை மீட்டெழுப்புகிறார். இடைவேளையிலும் அதற்கு பின்பான காட்சிகளிலும் விறுவிறுவேன வேகமெடுத்து இனியும் தாங்கள் அடிபணிந்து வாழ மாட்டோம் என அறிவிக்கிறார். உங்கள் முன்னால் அமரவே கூடாதென விலக்கப்பட்ட கூட்டத்திலிருந்து ஒருவர் வந்து சபை நாயகராக வீற்றிருக்க நீங்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நிற்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்குவதுதான் மெய்யான திராவிட அரசியல். மற்றதெல்லாம் வெறும் வேஷம்தான்
இவ்வாறு Ravanan Ambedkar தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications