திருமண நாளில் பணி நீக்கம்.. விடுப்பில் இருந்த ஊழியரை வீட்டிலேயே இருக்க சொன்ன தனியார் நிறுவனம்! ஷாக்
சென்னை: தற்போது பல்வேறு ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. திடீர் திடீரென்று ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் தான் திருமண நாளில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இப்போது ஒவ்வொருவரும் தங்களின் பணியை காப்பாற்றி கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர். குறிப்பாக ஐடி உள்பட பிற கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திக்திக் மனநிலையில் உள்ளனர்.

ஏனென்றால் டிசிஎஸ், அக்சென்சர், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. தங்கள் நிறுவனங்களின் மறுகட்டமைப்பு, நிதி மேலாண்மை, ஏஐ பயன்பாடு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பணி நீக்க நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி திடீரென்று பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு சில மாத சம்பளங்கள் பணி நீக்க நடவடிக்கையின்போது வழங்கப்படுகின்றன. இருப்பினும் தங்களின் மாத சம்பளத்தை நம்பி இஎம்ஐ, வீட்டு கடன், குழந்தைகளுக்கான கல்வி கடன் வாங்கியவர்கள் சிக்கலில் சிக்கி வருகின்றனர். இதற்கிடையே தான் ஒருவர் தனது திருமண நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 4 மாதங்களாக சேல்ஸ் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் அவரது பாஸ் பணியில் இருந்து நீக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அந்த ஊழியர் ரெடிட் தளத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நான் வழக்கம்போல் காலையில் வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தேன். அப்போது என் பாஸிடம் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. இன்று வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று அவர் கூறினார். அவரது அந்த மெசேஜ் வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிப்பது இல்லை. இதனால் அந்த மெசேஜை நான் வித்தியாசமாக அணுகினேன்.
இதனால் ‛‛ஓகே.. எல்லாம் சரியாக தானே இருக்கிறது?'' என்று நான் சந்தேகத்தில் அவரிடம் மெசேஜ் அனுப்பினேன். சில நிமிடங்கள் கழித்து அவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதில், ‛‛இல்லை.. இல்லை.. நான் உடனடியாக போன் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு ஆம் என்று கூறினேன். இதையடுத்து அவர் எனக்கு போன் செய்து பேசினார்.
அப்போது, நிறுவனத்தில் மறுகட்டமைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால், நான் பணி நீக்கம் செய்யப்படுவதாக கூறினார். மேலும் எனது திருமண நாளில் என்னை பணி நீக்கம் செய்ய நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், நான் அன்று விடுமுறை எடுத்திருந்தேன். என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என திருமண நாள் கொண்டாட்டத்துக்கு இடையூறு செய்யக்கூடாது என்று அவர் மறுநாள் என்னிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு அடுத்த சில மணிநேரத்தில் நான் குறைந்த சம்பளத்தில் மீண்டுமு் பணியில் சேர்க்கப்பட்டேன். ஆனால் எனக்கு பணி நீக்கத்துக்கான சம்பளம் தரவில்லை. அதேவேளையில் அவர்கள் எனக்கு கொடுத்த அனைத்து உபகரணங்களையும் மீண்டும் கேட்டுவிட்டனர். இப்படியும் நடக்கிறது என்பதை சொல்லத்தான் இந்த பதிவை செய்கிறேன்.
எனக்கு கோபமாக இருக்கிறது. நிறுவனங்கள் இப்படியான நடவடிக்கைகளை செய்வது சரியல்லை. எனக்கு வேறு வேலை தேவையாக உள்ளது. இதனால் இனி எந்த வாய்ப்புகளையும் விடப்போவது இல்லை'' எனக்கூறி புலம்பி உள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications