Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ எச்சில் இலை.. இப்போ மனுநீதி.. முக்கிய வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் போட்ட ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் வழக்கில் இருந்து நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளார். ஆனால் இவர் இதற்கு முன்பே சில முக்கியமான வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள் மூலம் கவனம் பெற்றார். எச்சில் இலை தொடர்பாக இவர் பிறப்பித்த உத்தரவு ஒன்று விவாதம் ஆனது. தற்போது மனுநீதி தொடர்பாக இவர் பிறப்பித்த உத்தரவு விவாதம் ஆகி உள்ளது.

எச்சில் இலை வழக்கு

பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்கிற்கு அனுமதி அளித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்துச் சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தை அடுத்த நெரூர் கிராமத்தில் அமைந்துள்ள சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலில், ஆண்டுதோறும் மே மாதத்தில் ஒரு நாள் அன்னதானம் வழங்கப்படும். அப்போது, படையல் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்தது. இந்தச் சடங்கிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால், 2015 ஆம் ஆண்டில் இதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த பத்தாண்டுகளாக இந்த வழக்கம் நடைபெறவில்லை.

இந்தச் சடங்கை மீண்டும் நடத்த அனுமதி கோரி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த ஆண்டு மே 17ஆம் தேதி, எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்கைத் தொடரலாம் எனத் தீர்ப்பளித்தார்.

நீதிபதி சுவாமிநாதனின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே 18 அன்று நெரூர் கோவிலில் பக்தர்கள் உண்ண உணவின் மிச்சமுள்ள இலைகளில் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டனர். இத்தகைய நடைமுறை, மனித மாண்புக்கு எதிரானது என சமூகத்தின் பல தரப்பினரும் குற்றஞ்சாட்டினர். மனிதர்களை இழிவுபடுத்தும் இந்தச் சடங்கிற்கு நீதிமன்றம் துணை போவதா என விமர்சனங்கள் எழுந்தன.

வெளிநாடுகளில் பணிபுரிவோர் வழக்கு

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு சட்ட உதவி வழங்குவதற்கான தெளிவான கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களால் ஏற்படும் மரணம், காயம் அல்லது சுரண்டல் போன்ற சூழ்நிலைகளில், பாதிக்கப்படும் இந்தியர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை இக்கொள்கை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவின் கேமரூனில் உள்ள 'ஆப்பிரிக்கன் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத் தொழிலாளர் அய்யப்பன் 2021-ல் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்த அந்நிறுவனம் பின்னர் அதை வழங்க மறுத்தது.

மத்திய அரசின் வெளியுறவுத்துறையும் கைவிட்ட நிலையில், அய்யப்பனின் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது அவசியம் என்று நீதிபதி இதில் குறிப்பிட்டார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி மூலம் நாடு பெரும் வருவாயைப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டி பேசிய அவர், அவர்களது உழைப்பால் அரசு நேரடிப் பலன் பெறும்போது, வெளிநாட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் அவர்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது என வலியுறுத்தினார்.

Manu declares the highest duty of the King is to protect his subjects says Justice Swaminathan

பண்டைய இந்திய சட்ட நெறிமுறைகளைக் குறிப்பிட்ட நீதிபதி சுவாமிநாதன், மனு மற்றும் மகாபாரதத்தை மேற்கோள் காட்டினார். ஒரு ஆட்சியாளரின் மிக உயர்ந்த கடமை தன் குடிமக்களைப் பாதுகாப்பதே என்று என்று மனு கூறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். வரி வசூலித்துவிட்டு, மக்களைப் பாதுகாக்கத் தவறினால் மன்னன் தார்மீக ரீதியாகக் குற்றவாளி ஆவான் என்று மனு கூறியுள்ளதாகவும், நவீன அரசியலமைப்பில் 'மன்னன்' என்ற சொல்லை 'அரசு' என்று புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி சுவாமிநாதன் - மனு நீதி

லத்தீன் மொழிச் சட்டச் சொல்லாடல்களை நீதிமன்றங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்துவதைப் போலவே, இந்தியாவின் சொந்த சட்ட மற்றும் தார்மீக மரபுகளிலிருந்து வழிகாட்டுதலைப் பெற தயங்கத் தேவையில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்திய பாரம்பரியத்தில், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆதாரங்களில் வேரூன்றிய சட்டக் கோட்பாடுகள், ஆழமான சமூக ஞானத்தை உள்ளடக்கியுள்ளதாகவும் உள்ளது . அதை சட்டங்களில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தலாம்.

அவை அரசியலமைப்பு தார்மீகம் அல்லது சட்டத்துடன் முரண்படாத வரை, நீதித்துறை தீர்வுகளுக்கு ஒரு செல்லுபடியான அடிப்படையாக அமையலாம் என்றும் நீதிபதி சுவாமிநாதன் கூறினார்.

அய்யப்பன் மரணம்

கேமரூனில் பணிபுரிந்த இந்தியத் தொழிலாளி அய்யப்பன் என்பவர் மரணமடைந்ததையடுத்து, அவரது மனைவி தாக்கல் செய்த ரிட் மனுவின் மூலம் இந்த வழக்கு எழுந்தது. தொழிலாளியின் மரணத்திற்கு இழப்பீடு தருவதாக நிறுவனம் உறுதியளித்த போதிலும், அது வழங்கப்படவில்லை. வெளிநாட்டில் சட்ட நடவடிக்கை எடுக்க ஏழை குடும்பங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிரமங்களை நீதிபதி குறிப்பிட்டதுடன், இத்தகைய வழக்குகளைக் கையாள்வதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியப் போக்கையும் விமர்சனம் செய்தார்.

அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஐ.நா. மாநாட்டில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், அதன் கொள்கைகள் பொருத்தமானவை என்றார் நீதிபதி. குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான இழப்பீடு விவகாரங்களில் குடும்பங்களுக்கு உதவ வேண்டிய மாநிலங்களின் கடமை இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டில் சட்ட உதவிக்கான முறையான கொள்கை இல்லாதது, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உண்மையான நிவாரணங்கள் கிடைக்காமல் செய்துவிடுகிறது என்று நீதிபதி சுவாமிநாதன் முடித்தார். இந்தக் குறைபாட்டிற்கு ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்கித் தீர்வு காணுமாறு மத்திய அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+