தமிழ்நாட்டின் உண்மையான அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறாங்க.. சென்னையில் ஆளுநர் ரவி பேச்சு
சென்னை: ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என்று இன்று சென்னை கிண்டியில் நடந்த "பாரத பண்பாடு" புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசையும் அதன் கொள்கைகளையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி நேரடியாகவே விமர்சித்து வருகிறார். பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் கருத்து மோதல் இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, சட்டமன்றத்தில் அரசின் உரையை படிக்க மறுப்பது என தொடர்ந்து அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி.

இதேபோல், திராவிடம் என்பது காலாவதியானது என்றும் விமர்சித்து வருகிறார். ஆளுநரின் இந்தக் கருத்துகளுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் நடந்த பாரத பண்பாடு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர் என் ரவி, ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என்று பேசினார்.
ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் முழுவதும் உண்மையை சொல்லவில்லை. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். ராமேஸ்வரம் கோயில் கோபுரம் வண்ணப்பூச்சுகள் இன்றி பொலிவு இல்லாமல் காட்சியளிக்கிறது. இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.
முன்னதாக கடந்த 6ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சியில், பேசிய ஆளுநர் ரவி, திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்கள் போலியானது என்றும் ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் பேசினார். அவர் கூறுகையில், "ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள்.
மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர். இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications