மெரினாவில் தெரியும் நிலவு.. சென்னை மக்களே அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
சென்னை: மெரினா கடற்கரையிலிருந்து நம்மில் பலரும் நிலவை ரசித்திருப்போம். ஆனால் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை மெரினாவிலிருந்து நெருக்கமாக பார்க்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் ஷரன் எனும் வானிலை ஆர்வலர் தினமும் தனது சக்தி வாய்ந்த தொலை நோக்கியை கொண்டு வந்து மக்களுக்கு நிலவை நெருக்கத்தில் காட்டுகிறார்.
பகல் நேரத்தில் பகுதிநேர கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் இவர், மாலை வேளையில் தனது பெரிய வெள்ளை தொலைநோக்கியுடன் கடற்கரைக்கு வருகிறார். விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள தனது வழக்கமான இடத்தில், ₹50 கட்டணத்துடன் சந்திரன், நட்சத்திரங்கள், மற்றும் அரிதாகப் பிற கோள்களையும் மக்களுக்கு இவர் காட்டுகிறார்.

சென்னையில் ஒளி மாசு அதிகம் எனவே நட்சத்திரங்களை பார்க்க மக்கள் சென்னையிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு போவார்கள். ஆனால், ஷரன், தனது தொலைநோக்கி மூலம் நிலவையும், இதர நட்சத்திரங்களையும் சென்னையிலிருந்தே நெருக்கத்தில் காட்டுகிறார். முதல் முறையாக நிலவை நெருக்கத்தில் பார்க்கும் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகின்றனர்.
இது குறித்து கூறும் மக்கள், "வழக்கமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வைனு பாப்பு விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுதான் நாங்கள் நிலவு, இதர நட்சத்திரங்களை பார்ப்போம். ஆனால், சென்னை கடற்கரையில் வைத்து நிலவை நெருக்கமாக பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது" என கூறியுள்ளனர்.
விண்வெளி உண்மையில் அற்புதமான ஒன்று. அதிலும் பூமிக்கு இயற்கை துணை கோளாக அமைந்திருக்கும் நிலவு, வியக்க தக்க விஷயமாகும். பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கி.மீ தூரத்தில் நிலவு இருக்கிறது. ஆனாலும் அது செய்யும் வேலை கொஞ்சம் நஞ்சமல்ல. கடலில் அலைகள் உருவாதற்கும், பூமியில் கோடை, குளிர் என பருவ காலங்கள் வருவதற்கும் நிலவுதான் காரணம். பூமி தனது அச்சிலிருந்து சாய்ந்து இருப்பதால்தான் பருவங்கள் ஏற்படுகின்றன. இப்படி சாய்த்து வைத்திருப்பது நிலவுதான்.
இதைவிட முக்கிய விஷயம் பூமியின் சுழற்சி வேகத்தை நிலவு கட்டுப்படுத்துகிறது என்பதுதான்.நிலவின் ஈர்ப்பு விசை, பூமியின் சுழற்சி வேகத்தை மெதுவாக்குகிறது. நிலவு இல்லையென்றால், ஒரு நாள் வெறும் 6 முதல் 12 மணி நேரமாக இருந்திருக்கலாம். இதனால், ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான நாட்கள் இருந்திருக்கும்.
அதேபோல பூமியில் உள்ள பல உயிர்கள் நிலவு வெளிச்சத்தைதான் நம்பியிருக்கின்றன. நிலவு வெளிச்சம் மற்றும் அதன் சுழற்சியை வைத்துதான் கடல்வாழ் உயிர்கள் பல இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவ்வளவு ஏங்க, நிலவை வைத்துதான் மனிதர்கள் முதன் முதலில் நாட்களை கணக்கெடுக்க தொடங்கினார்கள். நாம் முதலில் உருவாக்கிய காலண்டர் நிலவை அடிப்படையாக வைத்துதான் அமைந்திருந்தது. எனவே, நிலவு நமக்கு முக்கியம்.
அப்பேற்பட்ட நிலவை நெருக்கத்தில் பார்ப்பது என்பது அற்புதமான விஷயம். எனவே அதை மக்கள் தவறவிட வேண்டாம். வாய்ப்பிருப்பின் நீங்கள் சொந்தமாக தொலைநோக்கியை வாங்கி நிலவு மற்றும் இதர கோள்களை பார்த்து ரசிக்கலாம்.












Click it and Unblock the Notifications