சுனாமியின்போது.. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தத்தெடுத்த சிறுமிக்கு இன்று திருமணம்.. நெகிழ்ச்சியில் நாகை
சுனாமியில் 9 மாத குழந்தையாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் வைபவம் நடத்தி வைத்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரி
சென்னை: சுனாமியில் வெள்ளத்தில் சிக்கி பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளை மீட்டு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன். சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம் எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் 6065 பேர் உயிரிழந்து நாகை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக பேரிடர் பாதிப்பில் தாயையும், தந்தையையும் ஏராளமான குழந்தைகள் இழந்தனர்.

அப்போது நாகையில் அரசால் துவங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் 99 தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்கள். அதில் 9 மாத குழந்தையான சௌமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளம் குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த தற்போதைய தமிழக சுகாதாரத்துறை செயலராக செயல்பட்டு வரும் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார்.
சென்னைக்கு பணி மாறுதலில் சென்றாலும், ராதாகிருஷ்ணன் மாதாமாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி, அவர்களுடைய வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பை செலுத்தி பராமரித்து வந்தார்.
தொடர்ந்து சௌமியா மற்றும் மீனா ஆகியோர் 18 வயதை கடந்த பின்பு நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் தம்பதியினர் அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சௌமியா திருமணம் நாகையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நாகை ஆபிசர்ஸ் கிளப்பில் நடந்த திருமண விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை எஸ்பி ஜவஹர், நாகையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ஆதரவில் வளர்ந்த தனக்கு திருமணம் நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சௌமியா கூறினார்.
விவரம் தெரிந்த பல குழந்தைகள் தாய் தந்தையரை இழந்த நிலையில் மீட்க பட்டாலும், சொந்தம் பந்தம் என எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளாக மீட்டெடுத்த சௌமியா மற்றும் மீனா ஆகியோருடன் ராதாகிருஷ்ணன் மகிழ்ச்சியோடு திருமண விழாவில் நேரத்தை செலவிட்டார்.
சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ராதாகிருஷ்ணன் பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தைதான் சௌமியா என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். சுனாமி பேரலையின்போது விவரம் தெரிந்த பல குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் மீட்கப்பட்டாலும், சொந்தம், பந்தம் என எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக சௌமியா, மீனா ஆகியோரை மீட்டெடுத்தோம்.
அதில் சௌமியா திருமணம் நடைபெறுகிறது. மலர்விழி, மணிவண்ணன் தம்பதியினர் பாதுகாவலராக சௌமியாவை வளர்த்தாலும், பெற்ற மகளைபோல் சௌமியாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதை பார்க்கும் போது மனித நேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது என்றார்.
குழந்தையாக மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்ததோடு நிறுத்தி விடாமல் வாழ்வின் அடுத்த நிலையான திருமணம் வரை செய்து வைத்து அழகு பார்த்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மலர்விழி, மணிவண்ணன் தம்பதி குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்த திருமண நிகழ்வில் பங்கேற்று ஆசி வழங்கிய நிகழ்வு நாகை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications