அமித்ஷாவின் இசைவுகளுடன்.. அண்ணாமலையின் அசைவுகள்! வெகுவிரைவில் எடப்பாடி இல்லாத அதிமுக -மருது அழகுராஜ்
சென்னை: அண்ணாமலையின் அசைவுகள் அனைத்தும் அமித்ஷாவின் இசைவுகளுடனே முன்னெடுக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக -பாஜக கூட்டணி இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி அது கூட்டணியையே முறிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. இந்தச் சூழலில் வெகு விரைவில் எடப்பாடி இல்லாத அதிமுக என்று ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மருது அழகுராஜ்.

மருது அழகுராஜின் முகநூல் பதிவு வருமாறு; ''திருட்டுக் கை இருட்டை பார்த்தா நிற்காது என்பதை போல, தனது உடலில் ஓடும் ரத்தத்தையே A1 துரோகம் என கொண்டிருக்கும் எடப்பாடி தனது அடுத்த திருவிளையாடலை பா.ஜ.க.விடம் அரங்கேற்றப் பார்க்கிறார்.''
''ஆனால் இதுவரை அவருக்கு முட்டுக் கொடுத்த பா.ஜ.கவே எடப்பாடியின் அரசியலை முடித்து வைக்கப் போகிறது. அண்ணாமலையின் அசைவுகள் அனைத்தும் அமித்ஷாவின் இசைவுகளுடனே முன்னெடுக்கப்படுவதாகவே தோன்றுகிறது.''
''வெகு விரைவில் எடப்பாடி இல்லாத அண்ணா தி.மு.க கட்டமைக்கப் படும்.. அம்புட்டு தான்..'' இவ்வாறு மருது அழகுராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பாஜகவையும், அண்ணாமலையையும் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகிய இருவர் மட்டுமே கடுமையாக விமர்சித்திருப்பதும் மற்ற மாஜி அமைச்சர்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பாஜகவுக்கும் இடையேயான உரசலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ரசித்து வருவது மட்டும் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications