மாதம் ரூ.1,999 இருந்தால் கார்.. மாருதி நிறுவனம் அறிவித்த ஆஃபர்.. நடுத்தர மக்களுக்கு ஹேப்பியான நியூஸ்
சென்னை: நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை பூர்த்தி செய்யும் விதமாக இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் கவர்ச்சிகரமான இ.எம்.ஐ திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,999 ரூபாய் தவணை செலுத்தி கார்களை வாங்க முடியும்.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார்கள் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் மாருதியின் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறினால் இந்திய கார் சந்தைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி நிறுவனம்
இந்தியாவில் கார் விற்பனையில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி நிறுவனம் உள்ளது. சாலையில் ஓடும் கார்களில் 10 கார்களில் குறைந்தது 3 கார்கள் மாருதி நிறுவன கார்களாகவே இருக்கும் என சொல்லும் அளவிற்கு இந்திய கார் சந்தையில் தனி சாம்ராஜ்யம் நிகழ்த்தி வருகிறது மாருதி சுசுகி நிறுவனம்.
சிறிய ஹேட்ச்பேக் கார்கள் முதல் எஸ்யூவி, செடான் ரக கார்கள் வரை இந்த நிறுவனத்தின் அனைத்து வகையான கார்களும் சந்தைகளில் தனி ஆதிக்கம் செலுத்துகின்றன. மத்திய அரசு கடந்த 22 ஆம் தேதி அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் காரணமாக கார்களில் விலையும் சரிந்துள்ளது. இதற்கு முன்பாக 39-41 சதவீதமாக இருந்த வரி விகிதம் தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
40 சதவீதம் வரி குறைப்பு
ஆடம்பர கார்களுக்கு மட்டுமே 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வரி குறைப்பு காரணமாக மாருதி நிறுவனம் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சூடுபிடித்துள்ளது. மாருதி நிறுவனத்தின் சீனியர் எக்ஸிகியூட்டிவ் அதிகாரி பார்தோ பானர்ஜி இது தொடர்பாக பேசுகையில், "நவராத்திரி தொடங்கியதில் இருந்து தற்போது மாருதி நிறுவனத்திற்கு 80 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன.
முதல் நாளிலே 25,000 கார்கள் டெலிவரி
ஜிஎஸ்டி அமலான முதல் நாளில் மட்டும், 25,000 கார்களை டெலிவரி செய்துள்ளது. கார்களை பற்றி வாடிக்கையாளர்கள் விசாரிக்கும் நாள் மட்டும் 8 ஆயிரமாக உள்ளது. ஷோரூம்களில் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்ய இரவில் கூட உழைக்கிறார்கள். கார்களை மலிவு விலையில் கிடைப்பதை ஊக்குவிக்கும் விதமாக நிதி அளவில் சில புதுமையான திட்டங்களை நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
மாதம் ரூ.1,999 செலுத்தினால் போதும்
இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,999 செலுத்தியே வாடிக்கையாளர்கள் கார்களை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இருசக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் கார்கள் வாங்குவதற்கு இது எளிதாக இருக்கும். சிறிய ரக கார்கள் விற்பனையில் சரிவுக்கு வாடிக்கையாளர்கள் வாங்கும் திறனில் உள்ள சவால்களே காரணம். சமீபத்தில் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டது இ.எம்.ஐ வசதியை இன்னும் மேம்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட சில எண்ட்ரி லெவல் மாடல் கார்களுக்கான விலையை 24 சதவீதம் மாருதி நிறுவனம் குறைத்துள்ளது. இது டிசம்பர் 2025 வரை இருக்கும். எஸ்யூவி ரக கார்கள் விற்பனை வளர்ச்சி வலுவாகவே உள்ளது. விநியோகத்தை பொறுத்தவரை தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்வது சவாலாகவே உள்ளது. செப்டம்பர் மாதத்தில் முதல் 20 நாட்கள் கார்களை அனுப்பி (dispatches) வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவு
செப்டம்பர் 22 ஆம் தேதிதான் இதை மீண்டும் தொடங்கினோம். பல கார்கள் தற்போது கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. முடிந்த அளவு விரைவாக டெலிவரி செய்ய முயற்சித்து வருகிறோம். நீண்ட கால காத்திருப்பு காலத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே புக்கிங் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்," என்றார்.
நடுத்தர மக்களை கவரும் விதமாக மாதம் ரூ.1,999 தவணைக்கு கார் வழங்கும் திட்டத்தை மாருதி நிறுவனம் கொண்டு வந்துள்ளதாக கூறியிருக்கும் நிலையில், இது வெற்றிகரமாக செயல்பட்டால், இந்தியாவில் கார் சந்தைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவு இதன் மூலம் எளிதாக மாற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications