வன்கொடுமை சட்டத்தில் வழக்கு..ராஜகண்ணப்பனுக்கு எதிராக "கூட்டணி”.. கோரிக்கை வைக்கும் கே.பாலகிருஷ்ணன்
சென்னை : அரசு அதிகாரியை சாதிய ரீதியாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான ராஜேந்திரனை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்தது.

அதிகாரி புகார்
என்னை இப்படி யாரும் திட்டியது இல்லை. எனக்கு மனக்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு தூக்கம் இல்லை. சாப்பிட முடியவில்லை. இது பற்றி ஆட்சியர், துணை ஆட்சியரிடம் பேச முடியவில்லை. அதனால் இப்போது செய்தியாளர்களை சந்தித்து என் கஷ்டத்தை சொல்கிறேன் என்று முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இலாகா மாற்றம்
மேலும் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் 35 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட நிலையில் அதிலும் ராஜகண்ணப்பனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த துறைகளை கவனித்து வந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறையின் அமைச்சராக மாற்றப்பட்டார்.

ராஜகண்ணப்பன் மீது புகார்
ஆனால் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை போதாது எனவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாகவும், தமிழகம் தழுவிய அளவில் தேவேந்திர குல வேளாளர்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரியை சாதிய ரீதியாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிகாரிக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
மதுரையில் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "தமிழகத்தில் ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் இன்னும் சாதிய தீண்டாமை உள்ளது. தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன், அதிகாரியிடம் சாதிரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கதக்கது. ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். " என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications