காங்.க்கு அதிக சீட் தராதீங்க..மதிமுக, விசிக, தவாகவுக்கு தரலாமே..திமுகவுக்கு திருமுருகன் காந்தி யோசனை
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்களை ஒதுக்காமல் தமிழர் நலனுக்காக குரல் கொடுக்கும் மதிமுக, இடதுசாரிகள் ,விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மமகவுக்கு அதிக இடங்களை கொடுக்க வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் அதிக பாராளுமன்றத் தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுப்பதால் தமிழர்களுக்கு நலன் எதுவும் விளையப் போவதில்லை. கடந்தமுறை அதிக உறுப்பினர்களை காங்கிரஸுக்கு தமிழ்நாடு பெற்றுக்கொடுத்தது.

பாஜக ஊது குழல் காங்கிரஸ்: ஈழப்படுகொலையில் கைநனைத்த காங்கிரஸ், 15 ஆண்டு பின்பும் தமிழர்களின் உரிமைக்காக பேச தயாரில்லை. மேகதாது அணை, மீனவர் பிரச்சனை, நீட், அணை மசோதா, காவிரி சிக்கல் என எதற்கும் வாய்திறக்காதவர்களாக 2019-2024 காலத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் கடத்தினார்கள். கார்த்தி சிதம்பரம் பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிப்போனார்.
இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க: கடந்த 5 ஆண்டுகளில் தமிழர்களின் உரிமைக்களத்தில் நின்ற மதிமுக, விசிக, மமக, கம்யூனிஸ்டுகள், தோழர்.வேல்முருகன் போன்றோரின் குரல் பாராளுமன்றத்தில் அதிகமாக இருக்கவேண்டும். இவர்களுக்கு மேலதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இயக்கங்களுடன் கைகோர்த்து மோடிக்கு எதிரான அலையை உருவாக்கியவர்கள் இவர்கள். இந்த அலையை பயன்படுத்தி 2019ல் லாபம் அடைந்தது காங்கிரஸ். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டுமென்பதற்காக இக்கட்சிகள் பெருமளவில் தொகுதி பங்கீட்டில் சமரசம் செய்துகொண்டு விட்டுக்கொடுத்தனர்.
பொறுப்பே இல்லாத காங்கிரஸ்: வடநாட்டில் பாஜக வீழ்த்தப்பட காங்கிரஸ் உழைத்திருக்க வேண்டும். பொறுப்பற்ற முறையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கரை இழந்தனர். இம்மாநிலங்களில் பாஜகவிற்கு தோல்வி முகத்தை ஏற்படுத்தி இருந்தால் 2024 தேர்தலில் மோடியை வீழ்த்தும் வாய்ப்பை உருவாக்கி இருப்பார்கள். கூட்டணி கட்சிகளுடன் முரண்பாட்டை மட்டுமே வளர்த்துக் கொண்டதால் பாஜகவிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.
நம்பக் கூடிய கட்சி அல்ல காங்கிரஸ்: இந்நிலையில் தென்னிந்தியாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள காங்கிரஸ் முனைகிறது. கர்நாடகா, தெலுங்கானாவை கைப்பற்றிய பின்னர் கேரளா, ஆந்திரா என நகர்கிறார்கள். மாநில கட்சிகளிடமிருந்து அதிக இடங்களை பெற்றுக் கொள்வதால் பாஜகவை வீழ்த்திவிட முடியாது. இச்சமயத்தில் 2024 தேர்தலில் மோடிக்கு மாற்று என்பது, மாநில கட்சிகளின் கூட்டாட்சியாக மட்டுமே அமைய முடியும். அப்படியெனில் மாநில உரிமைகளுக்காக போராடும் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிக அளவில் 2024 பாராளுமன்றத்தை நிரப்ப வேண்டும். இல்லையெனில் காசுமீரை போல தமிழ்நாட்டையும், இதர மாநிலத்தையும் வரும்காலத்தில் பாஜக துண்டாடுமெனில் அதற்கு ஆதரவாக காஷ்மீர் பிளவிற்கு நின்றதை போல இந்த பிளவுகளுக்கும் காங்கிரஸ் ஆதரித்து நிற்கும். ஆகவே கூடன்குளம், நியூட்ரினோ, காவிரி, ஏழுதமிழர் விடுதலை, முல்லைப்பெரியார் என தமிழர் உரிமைகளுக்கு நம்மோடு இணைந்து போராடிய கட்சிகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல், வழக்கம் போல அதிக இடங்களில் காங்கிரஸ் நிற்கும் எனில் அது பாஜக, மற்றும் அதன் முகவர்களுக்கே வாய்ப்பாக அமையும். இவ்வாறு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் டபுள் டிஜிட் இலக்கத்தில் இடங்களைக் கேட்டு வருகிறது. திமுகவோ மிக அதிகபட்சமாக 8 இடங்கள் வரை தர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் விசிக, இடதுசாரிகள், மதிமுகவுக்கு தலா 2 இடங்கள்தான் திமுக தரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications