மதிமுகவில் பிரளயம்.. மல்லை சத்யா உடனான பிரச்சனைக்கு பின்னணியில் திமுகவா? என்ன சொல்கிறார் வைகோ?
சென்னை: மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது வைகோ விமர்சனங்களை வைத்த நிலையில், மல்லை சத்யா, கட்சியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. இந்நிலையில், யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது என்று வைகோ கூறியுள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வைகோ முன்னிலையில் இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் ஆகினர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் மல்லை சத்யாவை குற்றம்சாட்டி வைகோவே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மல்லை சத்யாவை விமர்சித்த வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "மல்லை சத்யா வை என் உடன்பிறவா தம்பி போல பார்த்து வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இயக்கத்துக்கு மாறாக மல்லை சத்யா செயல்பட்டு வந்தார். கட்சியை விட்டு வெளியேறியவர்களுடன் மல்லை சத்யா தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களுடன் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். என்னை பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடன் மல்லை சத்யா மிக நெருக்கமாக பழகி வருகிறார். அவர்களுடன் சேர்ந்து மல்லை சத்யா திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்தார்.
7 முறை வெளிநாடுகளுக்கு சென்ற போது கூட அவர் மதிமுக துணை பொதுச் செயலாளர் என்று குறிப்பிடவில்லை. என் பெயரையும் எங்கேயும் உச்சரிக்கவில்லை. மேலும், நான் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறேன் என்று கூட அவர் சொல்லவில்லை. மாமல்லபுரம் தமிழ் சங்கம் தலைவர் என்ற முறையில் தான் அவர் பேசினார். அவர் எங்கு சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டு சென்றது இல்லை.
துரோகம்
இது கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து விட்டு இந்த இயக்கத்தை எப்படி அது பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளார். இந்த நிலையில், மதிமுகவுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்த குழு உருவாக்க முயற்சித்தார். ஆனால், அது நடக்கவில்லை.
இந்த விவகாரம் மதிமுகவுக்கு பெரிய சோதனையாக வரக்கூடாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக தான் நிர்வாகக் குழுவில் அப்படி பேசினேன். இதற்கு, மேல் மல்லை சத்யா அவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்று தெரிவித்தேன். என் உயிரைக் காப்பாற்றிய, கட்சிக்கு விசுவாசமாக இருந்த மல்லை சத்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்படியே தலைகீழாக ஏன் மாறினார். மதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுடன் தினந்தோறும் தொடர்பு கொள்வது ஏன்? ன்று பேசி இருந்தார் வைகோ.
மல்லை சத்யா பதில்
இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மல்லை சத்யா வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா பதில் அளித்தார். அதில், மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார்." எனக் கூறினார்.
பின்னடைவு கிடையாது
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள வைகோ, "மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை. யார் கட்சியில் இருந்து வெளியேறினாலும் அது பின்னடைவை ஏற்படுத்தாது. கட்சியில் இருந்து வெளியேறிய நபர்களுடன் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது.
திமுக காரணம் இல்லை - வைகோ
மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார்; அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் அண்மைக்காலமாக அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை. மல்லை சத்யா மீது வரும் விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகக் குழு கூட்டத்தில் பதிவு செய்தேன். மல்லை சத்யா மீதான அதிருப்தியில் திமுக பின்னணியில் இருப்பதாக கூற முடியாது. அதில் உண்மையில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications