அதிகம் கேட்கும் மதிமுக, இடதுசாரிகள்.. அளந்து கொடுக்கும் திமுக! இன்று தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் இன்று மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நிறைவடைய இருக்கும் சூழலில் 2024 மக்களவைத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களையும், தேர்தல் பணிகளையும் தொடங்கி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. எதிர்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு மார்ச் மாதமே வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மமக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்று உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது. இது வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த தேர்தலை போன்று ராமநாதபுரம் தொகுதியையும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு கடந்த தேர்தலை போல் நாமக்கல் தொகுதியும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் மமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இன்று திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மதிமுக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இன்றே இந்த 3 கட்சிகளுக்குமான தொகுதிகள் முடிவாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மறுபக்கம் பாஜக - தமாக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி, தேமுதிக, பாமக கட்சிகளின் நிலை இன்னும் இறுதியாகவில்லை.












Click it and Unblock the Notifications