“மறுமலர்ச்சி திமுக மகன் திமுகவாக மாறிவிட்டது”.. துரை வைகோ மீது மல்லை சத்யா அட்டாக்!
சென்னை: "மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது" என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, துரை வைகோவை விமர்சித்துப் பேசியுள்ளார்.
மதிமுகவுக்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் மல்லை சத்யா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோருக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த மதிமுக பொதுக்குழுவில், மல்லை சத்யா துரை வைகோவை விமர்சித்து பேசினார். இதனையடுத்து துரை வைகோ கோபமடைந்து வெளியேறினார். இதன் காரணமாக துரை வைகோ- மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன்பிறகு வைகோ தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார்.
இந்நிலையில் தான் வைகோ, மல்லை சத்யாவை விமர்சித்து கட்சி கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. துரோகி பட்டம் கொடுத்து வைகோ தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாக அக்கட்சியின் மல்லை சத்யா குற்றம் சாட்டியிருந்தார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்றும் வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் மல்லை சத்யா.
இரு தரப்பினரும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மல்லை சத்யா ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார். சென்னையில் நாளை தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, "தற்போது நான் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கிறேன். இன்னும் நான் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. மறுமலர்ச்சி திமுக, தற்போது மகன் திமுகவாக மாறி உள்ளது.
பொதுமக்கள் மத்தியில் நீதி கேட்டு, நாளை சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன். செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள அண்ணா பிறந்தநாள் மாநாட்டிற்கு எனக்கும் எனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாமல் அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்டால், அடுத்தகட்டமாக ஒரு பெரிய அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சிக் கூட்டம் நடைபெறும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications