ஆசையாக சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவிகள்.. கொஞ்ச நேரத்திலேயே அடுத்தடுத்து மயக்கம்! சென்னையில் பரபர
சென்னை: கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரியாணி என்றாலே அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். இதன் காரணமாகவே நமது ஊரில் தெருவுக்கு நாள் பிரியாணி கடைகள் இருக்கின்றன.
இருப்பினும், முறையாகப் பிரியாணியைச் சமைக்கவில்லை என்றாலும் கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்தி இருந்தாலும் அதைச் சாப்பிடுபவர்களுக்குப் பெரிய உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.

சென்னை கல்லூரி
இதைத் தடுக்க சென்னையில் இருக்கும் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் தனியார் விடுதியில் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.

சிக்கன் பிரியாணி
இந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படித்து வருகிறார்கள். இதில் பல மாணவ மாணவிகள் கல்லூரி விடுதிலேயே தங்கிப் படித்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுதியில் அமைந்துள்ள உணவகத்தில் பிரியாணி சமைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பரிமாறப்பட்டு உள்ளது.

வாந்தி மயக்கம்
இதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட மாணவிகளில் சிலருக்கு திடீரென வந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேநேரம் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் உடல்நிலையும் பரிசோதனை செய்யப்பட்டது.

சிகிச்சை
இருப்பினும், அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால் சோதனைக்குப் பின் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களும் கூட சில மணி நேரச் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஓட்டேரி பகுதியில் கேட்டரிங் பணி செய்யும் ஊழியர் ஒருவர், அதிகாலை 2 மணியளவில் பணி முடிந்து வரும் போது மட்டன் பிரியாணியை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளார். இருப்பினும், மட்டன் பிரியாணியைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
