சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் அச்சம் வேண்டாம்.. இதுபோல் எவ்வளவோ பாத்துட்டோம்.. நிபுணர்கள்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் அச்சம் வேண்டாம். இது போல் நிறைய தொற்று நோய்களை சந்தித்துள்ளோம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீதம் சென்னையில்தான்.
இதனால் மக்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சென்னையிலிருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் நோய் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இடைவெளி
வடசென்னையில் இட நெருக்கடியால் அங்கு வீடுகளுக்கிடையே இடைவெளி இல்லாமல் பெட்டியை அடுக்கி வைத்தது போல் காணப்படுகிறது. மேலும் இங்கு வீடுகளைவிட்டு வெளியே வந்தாலே அடுத்த வீட்டாருடன் பழகும் அளவுக்கு இடைவெளி இல்லாமல் உள்ளதும் ஒரு காரணம். மேலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் கூட்டம் கூட்டமாக சேர்ந்து கொண்டு தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.

நோய் தொற்று
அது போல் பெரும்பாலான இடங்களில் ஆண்களும் சீட்டுக் கட்டு உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். இதனால் சமூக விலகல் கேள்விக்குறியாகி ஒருவருக்கு நோய் தொற்று இருந்தாலும் அப்படியே அடுத்தவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் சந்தை, காய்கறி சந்தை, இறைச்சி கடைகளிலும் பெரும் கூட்டமாக கூடி பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.

அஞ்சாதீர்
இதனாலும் நோய் எளிதில் பரவுகிறது. எனவே வடசென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவிக நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அறிகுறி இல்லாதோருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தொற்றுநோய் துறை வல்லுநர்கள் கூறுகையில் சென்னையில் அதிகம் பாதிப்பு வருவதை கண்டு அஞ்ச வேண்டாம்.

எண்ணிக்கை
பொதுவாக தொற்று நோய்களின் பாதிப்பு ஒரு இடத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் அந்த நோய் அந்த இடத்தில் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம். அதிகமாக சோதனைகள் நடத்தப்படுவதால் இது போல் அதிக எண்ணிக்கை காட்டப்படுகிறது நல்லதுதான். இனி பாருங்கள் சென்னையில் இந்த நோய் தொற்று பாதிப்பு விரைவில் குறையும்.

கடைப்பிடியுங்கள்
இது போல் நிறைய தொற்றுகளை நாங்கள் சந்தித்துள்ளோம். அதில் எல்லாம் இதுதான் நடக்கும். முதலில் தொற்று அதிகரிக்கும் பின்னர் அப்படியே குறைந்துவிடும். எனவே மக்கள் அஞ்ச வேண்டாம். அதற்காக அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications