சேலம், நெல்லை, கடலுார் மாவட்டங்களுக்கு வரும் பிரம்மாண்ட நுாலகங்கள்.. டெண்டர் கோரிய தமிழக அரசு!
சென்னை: மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களில் பிரம்மாண்ட நூலகங்களை கட்டுவதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி நெல்லை, கடலூர் மற்றும் சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் பிரம்மாண்ட நூலகங்களை அமைக்க தமிழக அரசு தரப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் சேலம், நெல்லை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்ட நிலையில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டது.

இது மதுரை மாணவர்கள், இளைஞர்கள், போட்டித் தேர்வுகளை எழுதுவோருக்கு மிகப்பெரிய அறிவுக் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. இதேபோல் கோவையிலும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் 75 சதவிகிதம் வரை முடிவடைந்த நிலையில், திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
இது அந்தந்த மாவட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அடுத்த 3 மாவட்டங்களில் நூலகங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை போல் அடுத்ததாக சேலம், நெல்லை மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. சேலத்தில் பாரதிதாசன் பெயரில் 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.74 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 5 தளங்களுடன் ரூ.69 கோடியில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரில் ரூ.80 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கோவை மற்றும் திருச்சியில் விரைவில் நூலகத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, இந்த ஆட்சியிலேயே திறந்து வைக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications