மனவளர்ச்சி குன்றிய மாணவி பலாத்காரம்.. சென்னையில் 2 மாணவர்கள் கைது.. 4 சிறப்பு படைகளை அமைத்த போலீஸ்
சென்னை: மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதேபோல, இந்த வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசில் தந்த புகாரில், "நான் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய மூத்த மகளுக்கு பிறந்தது முதல் மூளை வளர்ச்சி 'ஐக்யூ 40 சதவீதம்' உள்ளதால், சற்று மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். இவர் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

பள்ளிப்படிப்பு: பள்ளி படிப்பை என்னுடைய மகள் 10ம் வகுப்பு வரை முகப்பேரில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் படித்தார். பிறகு வீட்டில் இருந்த எனது மகள் 12ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வாக எழுதி வெற்றி பெற்றார். அதன் பிறகு மனநலம் குன்றியவர் சான்றிதழ் அடிப்படையில் தற்போது அண்ணாசாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். எனது மனைவி மாரடைப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டு இறந்துவிட்டார். இருந்தாலும் எனது மகளை நான் எந்த குறையும் இன்றி வளர்த்து வருகிறேன்.
எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக சொன்னார். மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வாக்குமூலம்: இந்த புகாரின்பேரில் எழும்பூர் மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.. அதேபோல, மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் சீண்டல் செய்ததாக, கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் இருவரும் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அதாவது, மாணவிக்கு அதிகமாக சாக்லேட் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, அவருக்கு விலை உயர்ந்த சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து, ஆபாச வீடியோக்களை செல்போனில் காட்டி, அப்பெண்ணுக்கு பாலியல் உணர்வுகளை இந்த மாணவர்கள் தூண்டினார்களாம். பிறகு மாணவியை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியிலுள்ள லாட்ஜ்களுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது..
நெருங்கிய நண்பர்கள்: அத்துடன், தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன், மாணவியை பேச வைத்து அவர்களுடனும் நெருக்கமாக இருக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கைதான மாணவர்கள் வாக்குமூலம் தந்திருக்கிறார்களாம்.
இதனிடையே, இந்த வழக்கை பொதுவெளியில் விமர்சிப்பது, சாட்சியங்களை கலைத்து புலன் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், இவ்வழக்கு விசாரணையை விமர்சிக்க வேண்டாம் என்று காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாலியல் சீண்டல்: இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "மனமுதிர்ச்சியற்ற கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளை உடன் படிக்கும் மாணவியும் வேறு சில ஆண் நண்பர்களும் தவறான முறையில் வழி நடத்துவதாகவும், அவர்களில் ஒரு ஆண் நண்பர் பாலியல் சீண்டலுக்கு முயற்சி செய்ததாகவும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் சிஎஸ்ஆராக ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த விசாரணையில் சம்பந்தபட்ட பெண் தோழி மற்றும் சில ஆண் நண்பர்கள் விசாரிக்கப்பட்டனர். பாலியல் குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்தவுடன், டிச.6ம் தேதியன்று எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிச.7ம் தேதி திருவள்ளுரைச் சேர்ந்த சுரேஷ் என்ற கல்லூரி மாணவரும் மற்றொரு பள்ளி மாணவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மன வளர்ச்சி குன்றியவராக இருப்பதால் புலன் விசாரணை செய்வது விசாரணை அதிகாரிக்கு சவாலாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவி தினமும் கல்லுாரிக்கு ஆட்டோவில் தான் செல்வாராம்.. அவர் ஆட்டோவில் செல்லும் போதே, கல்லுாரிக்கு உள்ளே செல்ல வேண்டாம், வெளியே போகலாம் என, மாணவியை கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் அழைத்து சென்றுவிடுவார்களாம். தற்போது கல்லூரி மாணவர் சுரேஷ் புழல் சிறையிலும், பள்ளி மாணவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தோழியிடம் விசாரணை: இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியை, ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து தவறான செயலுக்கு முக்கிய பங்கு வகித்த அரக்கோணத்தை சேர்ந்த தோழியை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்... அந்த தோழியிடம் விசாரணையும் தற்போது நடந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications