இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ
சென்னை: உலகப் புகழ்பெற்ற சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா (Meta), தனது இந்தியப் பிரிவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மெட்டா நிர்வாகம் உலகளவில் 8000த்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்தது.
இதன் அடிப்படையில் இந்திய அலுவலகத்தில் விளம்பர விற்பனை (Ad Sales), சந்தைப்படுத்துதல் (Marketing) மற்றும் தனிநபர் பங்களிப்பாளர்கள் (Individual Contributors) போன்ற முக்கியப் பிரிவுகளில் பணியாற்றி வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி நடவடிக்கை இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

விடியற்காலை 4 மணி' ஈமெயில்
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ஊழியர்களுடன் எந்தவித முன்னறிவிப்போ அல்லது முன்கூட்டிய கலந்தாலோசனையோ இன்றி மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த பணிநீக்க சுற்றில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலை 4 மணிக்கே நிறுவனத்திடமிருந்து பணிநீக்கம் தொடர்பான முறையான மின்னஞ்சல்கள் (Cold Emails) அனுப்பப்பட்டுள்ளன.
விடிந்து எழுந்ததும் தங்களுக்கு வேலை போய்விட்டதை அறிந்த ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் போதிய இழப்பீடாக (Severance Package) நான்கு முதல் ஆறு மாத காலச் சம்பளம் வழங்கப்படும் என்று மெட்டா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் நிலை
இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கை குறித்து மெட்டா இந்தியாவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.
மெட்டா நிறுவனம் இந்த பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையை நாடு வாரியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. இருப்பினும், சந்தை வல்லுநர்களின் கணிப்பு மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் மெட்டா நிறுவனத்திற்குச் சுமார் 400 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் 10-20 ஊழியர்கள் வரையில் இந்த பணிநீக்க சுற்றில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா ஆட்குறைப்பின் பின்னணி
மெட்டா நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான மற்றும் கொடூரமான மறுசீரமைப்பு உத்தியை தற்போது கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது மெட்டாவின் ஒட்டுமொத்த உலகளாவிய பணியாளர்களில் 10 சதவீதமாகும்.
இந்த பணிநீக்கத்தில் மொத்த டார்கெட்டும் நடுத்தர மேலாண்மைப் பதவிகளில் (Managerial Roles) இருக்கும் ஊழியர்கள் தான்.இப்பிரிவு ஊழியர்களை முற்றிலுமாகக் குறைத்து, நிறுவனத்தின் கட்டமைப்பை எளிமையாக்குவதே இந்த ஆட்குறைப்பின் முக்கிய நோக்கமாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி மாறும் மெட்டா
இந்த வேலைவாய்ப்புப் பறிப்பின் மற்றொரு முக்கியப் பின்னணியாகச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த மெகா பணிநீக்கத்துடன், மெட்டா நிறுவனம் சுமார் 7,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய வேலைத்திட்டங்களுக்கு (AI Workflows) அதிரடியாகப் இடமாற்றம் செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆட்குறைப்பு மற்றும் பணியிட மாற்றம் ஆகிய இரண்டின் மூலமும் மெட்டா நிறுவனத்தின் சுமார் 20 சதவீத பணியாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உழைப்பைக் குறைத்து, ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இந்த அதிரடிப் போக்கு ஐடி உலகைக் கலங்கடித்துள்ளது.
இதேவேளையில் மெட்டா ஏஐ துறையில் முன்னோடியாக இருக்கும் பல வல்லுனர்களை அதிக சம்பளத்தை கொடுத்து இழுத்து வருகிறது. இதேபோல் பல திறன்மிக்க ஏஐ நிறுவனங்களை வாங்கியும் தனது ஏஐ பலத்தை அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications