போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை.. நந்தம்பாக்கத்திற்கு மெட்ரோ எப்போது.. அறிய வேண்டிய 5 விஷயங்கள்
சென்னை: போரூர்-பூந்தமல்லி இடையிலான டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கூறியிருக்கிறார். போரூரில் இருந்து வடபழனி வழியாக பவர்ஹவுஸ் வரையிலும், போரூரில் இருந்து ஆலப்பாக்கம் வரையிலும், ஆலப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலும் அடுத்தகட்டமாக சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னைவாசிகள் அறிய வேண்டியது பற்றி பார்ப்போம்..
முக்கியமான வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகள் இருப்பது சென்னையின் வரம் ஆகும். அதேநேரம் சென்னையில் அண்ணாசாலை ஓஎம்ஆர் சாலை, வடபழனி சாலை, பூந்தமல்லி சாலை, ஆந்திராவை இணைக்கும் மாதவரம் சாலை போன்ற பகுதிகளில் ரயில் சேவைகள் இல்லாமல் இருந்தது. படிப்படியாக மெட்ரோ ரயில் சேவைகள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக சென்ட்ரல் முதல் பரங்கிமலை (கோயம்பேடு வழியாக) வரை ஒரு மெட்ரோ ரயில் சேவையும், விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை ஒரு மெட்ரோ ரயில் வழித்தடமும் உள்ளது. இந்த வழித்தடம் சென்னையின் மையப்பகுதியில் உள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடந்து வருகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதுபற்றி அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள் பற்றி பார்ப்போம்
டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள்
2-ம் கட்ட மெட்ரோ ரயில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையாக அறிமுகம் ஆகிறது. அதன்படி 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரயில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை வந்தது. இந்த ரயிலை கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி பூந்தமல்லி-போரூர் இடையே முதல் சோதனை ஓட்டம் செய்து பார்த்தார்கள். அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக இயக்கி பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 28-ந்தேதி 2-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
சோதனை ஓட்டம் வெற்றி
இந்த நிலையில், டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3-ம் கட்ட சோதனை நேற்று, போரூர் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை நடந்தது. சுமார் 10 கி.மீ. தூரத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் பூந்தமல்லி முதல் போரூர் வரை உயர்மட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடத்தினார்கள். தற்போது போரூரில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை கீழ்மட்ட பாதையில் சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.
டிசம்பரில் சேவை
பூந்தமல்லி முதல் போரூர் வரை உயர்மட்ட பாதை வழித்தடத்தில் மொத்தம் 10 ரயில் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதுவரை 6 டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வந்திருக்கிறது. டிசம்பர் மாதத்தில் இந்த வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
நந்தம்பாக்கத்திற்கு மெட்ரோ எப்போது
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தை பொறுத்தவரை பூந்தமல்லி முதல் போரூர் வரை டிசம்பரில் ரயில் சேவைகள் இயங்கப்பட உள்ளது. போரூரில் இருந்து வடபழனி வழியாக பவர்ஹவுஸ் வரையிலும், போரூரில் இருந்து ஆலப்பாக்கம் வரையிலும், ஆலப்பாக்கத்தில் இருந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வரையிலும் அடுத்தகட்டமாக சேவை தொடங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
ஏஐ தொழில் நுட்பம்
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தை பொறுத்தவரை டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை என்பதை தாண்டி இன்னொரு விஷயமும் இருக்கிறது. அது தான் ஏஐ தொழில் நுட்பம்.. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் உள்ள சிக்னல்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடுகிறதாம் சென்னை மெட்ரோ. மேலும் இதுவரை எங்கும் இப்படி யாரும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதேபோல் பராமரிப்பு பணிகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடத்தில் பரங்கிமலை, திநகர், மயிலாப்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் மிகவும் முக்கியமான ரயில் நிலையங்களாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக முடியும் என்கிற நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications