எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரனை வைத்து.. ஒரே கல்லில் "2 மாங்காய்.." இபிஎஸ்-ஓபிஎஸ் மாஸ்டர் "ஸ்ட்ரோக்"
சென்னை: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பேரன் ராமச்சந்திரனுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மாஸ்டர் ஸ்ட்ரோக் செய்துள்ளனர்.
மறைந்த முதல்வா் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த, ஜானகி சகோதரருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. லதா, கீதா, சுதா, பானு என்ற அந்த நால்வரை வளர்த்து வந்தார் எம்ஜிஆர்.
அவா்களில் சுதாவின் கணவர் விஜயகுமாா் என்ற விஜயன் 2008ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

பொறியியல் பட்டதாரி
சுதா மற்றும் விஜயன் தம்பதியின் இரண்டாவது மகன்தான் ராமச்சந்திரன். பொறியியல் படிப்பு முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பட்ட மேற்படிப்பு படித்தவராகும். படிப்பை முடித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வர ஆசை தெரிவித்துள்ளார் ராமச்சந்திரன்.

தேர்தலில் போட்டியிட விருப்பம்
சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அவர் விரும்பினார். எம்ஜிஆா் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது அவரது விருப்பம். எனவே, அதிமுகவில் வாய்ப்பு கேட்டு ராமச்சந்திரன் விருப்ப மனு அளித்திருந்தார்.

எம்ஜிஆர் குணம்
எம்ஜிஆரைப் போலவே தாராள குணம் கொண்டவர் ராமச்சந்திரன் என்கிறார்கள். கொரோனா நோய்த் தொற்று காலத்தில் ஆண்டிபட்டி தொகுதியில் ஏராளமான நல உதவிகளை வழங்கியுள்ளார் ராமச்சந்திரன். சுமாா் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்தாராம். எனவே அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவேதான், ஆண்டிபட்டி அல்லது ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் ராமச்சந்திரன்.

ஆண்டிப்பட்டியில் செல்வாக்கு
அதேநேரம், ராமச்சந்திரனுக்கு, அதிமுக வேட்பாளா் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட ஏ.லோகிராஜனுக்கும், ஆலந்தூா் தொகுதியில் போட்டியிட பி.வளா்மதிக்கும் அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சீட் தரவில்லை
வாரிசு அரசியலுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது அதிமுக. இந்த நிலையில், எம்ஜிஆர் பேரன் என்பதற்காக, ராமச்சந்திரனுக்கு சீட் கொடுத்தால், அது விமர்சிக்கப்படும் என்று நினைத்து அதிமுக தலைமை சீட் தரவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம், ராமச்சந்திரன் ஏதாவது ஒரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டாலோ, அல்லது அமமுகவில் இணைந்தாலோ சிக்கல் என்பதையும் அதிமுக தலைமை யோசித்துள்ளது.

அதிமுகவில் பதவி
இந்த நிலையில்தான், ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் தற்போது கட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும், எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலாளா் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ராமாபுரத்தில் எம்.ஜி.ஆா்., வாழ்ந்த இல்லத்தில் தற்போது ராமச்சந்திரன் வசித்து வருகிறார். இனி அதிமுக அலுவலகத்திலும் அவர் கால் பதிப்பார்.

எடப்பாடி-ஓபிஎஸ் திட்டம்
சீட் தராமல் விமர்சனங்களை தவிர்த்த அதிமுக தலைமை, இன்னொரு பக்கம் கட்சிப் பதவியை வழங்கி எம்ஜிஆர் பேரனை தங்களுடனே வைத்துக் கொண்டுள்ளது. ஒரே கல்லில் இரு மாங்காய் என்று சொல்வதை போல ஒரு மூவ் எடுத்து வைத்துள்ளனர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ். பார்க்க எம்ஜிஆர் மாதிரி பளபள என கலராக இருக்கிறார் ராமச்சந்திரன். அவர் அதிமுகவில் இருப்பது, அடிப்படை தொண்டர்கள் வாக்குகளை தக்க வைக்க உதவும். கட்சிப் பொறுப்பு தந்துள்ளதால், ராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. தேனி மாவட்டத்தில், இவரது பிரச்சாரம் அதிமுகவுக்கு பெரும் உதவியாக இருக்கும். இப்படி பல கணக்குகளின் அடிப்படையில் காய் நகர்த்தியுள்ளது அதிமுக தலைமை.












Click it and Unblock the Notifications