அரசியலுக்கு வந்த முதல் நடிகர் யார்? எம்.ஜி.ஆர் டூ விஜய்.. ஆடுகளம் டூ அரசியல் களம்!
சென்னை: சினிமா டூ அரசியல் என புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார் விஜய். இதுவரை எத்தனைப் பேர் சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார்கள்? அதன் பலன் என்ன? பலவீனம் என்ன?
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டில் ஒன்றும் அதிர்ச்சியான செய்தி அல்ல. காலங்காலமாக அது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்னொரு பக்கம் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடாதீர்கள் என்று பலர் பேசி வருகிறார்கள். சினிமா துறையைச் சேர்ந்த சீமான் கூட, சினிமா நடிகர்களை அரசியல் தலைவர்களாகப் பார்க்காதீர்கள் எனப் பேசிவருகிறார். ஆனால், விஜய் கட்சி தொடங்குவதில் அவரிடம் எதிர்ப்பு இல்லை. 'தம்பி வரட்டும்; ஒரு தமிழன் வரட்டும்' என்று சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறார்கள்.
இதற்கு நேரெதிரில் இருக்கிறது பாமக. திரை நட்சத்திரங்கள் என்றாலே அக்கட்சிக்கு அலர்ஜியாக இருக்கிறது. அவர்களை அரசியல் தலைவர்களாக ஏற்கக்கூடாது எனப் பல வருடங்களாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குரல் எழுப்பி வருகிறார்.
ஆனால், விதி வலியது என்பதுபோல் அன்று எம்.ஜி.ஆர் தொடங்கி இப்போது கமல்ஹாசன் வரைக்கும் திரைத்துறையைச் சார்ந்தவர்களே தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் கூடிய விரைவில் இப்போது விஜய்யும் இணைய இருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், எம்.ஜி.ஆர் சினிமா இருந்து அரசியலுக்கு வரவில்லை. அவர் நாடக உலகத்திலிருந்து சினிமாவுக்குப் போனார். அப்போது அவர் தூய்மையான காந்தியவாதி. எளிமையாகச் சொன்னால், காங்கிரஸ் தொண்டர்.
அவர் மட்டுமல்ல; சினிமாவில் உள்ள பலர் அன்றைக்குக் காங்கிரஸ் தொண்டர்களாகவே இருந்தனர். குறிப்பாகச் சொன்னால் கே.பி.சுந்தராம்பாள். மிகப் பிரபலமான பாடகி. லதாமகேஷ்கர் வியந்து பார்த்த பாடகி. அவரது கணவர் கிட்டப்பா காங்கிரஸ்காரர். அப்படிப்பட்ட கே.பி.சுந்தராம்பாளை முதன்முதலாக எம்.எல்.சி ஆக்கி, சினிமா டு அரசியல் களத்திற்கு அவரை அழைத்து வந்தவர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி.

ஆக, அந்தக் காலத்தில் தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் காந்தியால், காங்கிரசால் ஈர்க்கப்பட்டிருந்தனர். அந்த வரிசையில் கதராடைக் கட்டிக் கொண்டு முழு காங்கிரவாதியாக இருந்த எம்.ஜி.ஆரை, திராவிட இயக்கம் பக்கம் அழைத்துக் கொண்டு வந்தவர் மு.கருணாநிதி. இவரை மட்டுமல்ல; கவிஞர் கண்ணதாசனையும் திமுக பக்கம் திருப்பியவர் கருணாநிதிதான்.
காந்தி, காங்கிரஸ் என இருந்த எம்.ஜி.ஆர். அண்ணாதுரை, பெரியார் எனத் திராவிட இயக்க பாதைக்குத் திரும்பினார். அண்ணாதுரையே எம்.ஜி.ஆரின் வருகையை வரவேற்றார். அது திமுகவுக்கு பலம் என நம்பினார்.
ஆக, காலம் போன காலத்தில் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வரவில்லை. நாடகக் கொட்டகையில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு நடிப்பும் அரசியலும் இரு கண்களாக இருந்தன.

ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. வாலிபம் இருக்கும் வரை திரையுலகம் என இருப்பவர்கள், வாலிபம் தீர்ந்ததும் அரசியல் பக்கம் படை எடுக்கிறார்கள்.
திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எம்.ஜி.ஆர்., ஒரு கட்டத்திற்குப் பின்னர் அக்கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியால் வெளியேற்றப்பட்டார். அப்போதும் அவர் தனிக்கட்சி தொடங்கும் ஆசையில் இல்லை. திமுகவில் எம்.ஜி.ஆருக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக அவரது விசுவாசிகள் கலங்கினர். அவரைக் கட்சி ஆரம்பிக்கும் படி நிர்ப்பந்தித்தனர்.
அவர், அதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. கூட்டம் வெள்ளம்போல் வீட்டை நோக்கிப் படையெடுப்பதை உணர்ந்த, எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கமாக இருந்த அனகாபுத்து ராமலிங்கம் என்பவர், ஆரம்பித்து வைத்திருந்த 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழக'த்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது அவர், 'ஒரு சாதாரண தொண்டன் ஆரம்பித்த கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்' என்று அறிக்கைவிட்டார். அப்பேச்சு இன்னும் அதிக மக்களைக் கவர்ந்தது. அந்தக் கட்சிதான் படிப்படியாக வளர்ந்து இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆரைப் போலவே திமுகவிலிருந்தவர்தான் சிவாஜி. பகுத்தறிவதாம் பேசிய வந்த அவர், திடீரென்று திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றார். அது பரபரப்பானது. கட்சி விளக்கம் கேட்டது. அவர் கட்சியை விட்டு விலகினார்.

அரசியல் அதிகம் தெரிந்தவர்கள், சிவாஜி திட்டமிட்டு வெளியேறினார். அவர் தேசியவாதியாக மாறினார். 'வீரபாண்டி கட்டபொம்மன்; 'கப்பலோட்டிய தமிழன்' என அவரது மனம் தேசிய நீரோட்டத்தில் கலந்தது. அதற்கு காமராஜ் முக்கிய காரணமாக இருந்தார். ஆகவே, அவர் அங்கே சென்று, பின்னர் தமிழக முன்னேற்ற முன்னணி எனப் புதுக்கட்சி தொடங்கி ஜனதாதளம் கட்சியுடன் இணைத்தார். பின்னர் சிறுக சிறுக தேய்ந்து அரசியலை விட்டே ஒதுக்கினார்.
இவர்களைத் தொடர்ந்து பல நடிகர் கட்சி தொடங்கினர்.'முந்தானை முடிச்சு' படம் வெளியான காலகட்டத்தில் பாக்யராஜ், எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசாகக் கொண்டாடப்பட்டவர். அதைத் தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்க முயன்றார். அது பலன் தரவில்லை. தொடங்கிய வேகத்திலேயே தோல்வியைத் தழுவியது கட்சி.

இவரைப்போல் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த டி.ராஜேந்தர், அக்கட்சியிலிருந்து வெளியேறி இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். டி.ராஜேந்தர், பின் விஜய டி ராஜேந்தர் என தன் பெயரை எண் கணிதம் படி மாற்றி மாற்றி அமைத்ததைப் போல் கட்சியின் பெயரை மாற்றி மாற்றி அமைத்தார். ஆனால், மக்களின் மனதை இவரால் மாற்றி அமைக்க இதுவரை முடியவில்லை.
இதேபோல் திமுகவில் ராஜ்சபா எம்.பி.ஆக இருந்தவர் சரத்குமார். அவர், பின்னர் அதிமுக பக்கம் போனார். இறுதியாக அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
இவரும் விஜயகாந்தும் நண்பர்கள். நடிகர் சங்கத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். ஆனால், 2005இல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது சரத்குமார் அவர் பக்கம் செல்லவில்லை.

இதற்கு இடையில் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கார்த்திக். அவரது கட்சி பெயர் என்னவென்றே பலருக்குத் தெரியாது. மனித உரிமை காக்கும் கட்சி என்பது அவர் கட்சி பெயர். அவர் மனித உரிமையைக் காப்பதற்காக இதுவரை எதையுமே செய்ததில்லை. ஆகவே, மக்கள் அவரை பொருட்டாக நினைக்கக்கூட இல்லை.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பின்னர் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து அதிக உயரம் தொட்டவர் விஜயகாந்த்தான். எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்குப் போனார்.

இதே அளவுக்கு தானும் உயர்ந்துவிட முடியும் என சினிமா டூ அரசியல் வாழ்க்கைக்கு வந்தார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்ற அவரது கட்சியின் பெயரே கழகங்கள் இல்லாத புதுவிதமாக இருந்தது. கூடவே அது குழப்பத்தையும் தந்தது.
கட்சி ஆரம்பித்த வேகத்தில் தேர்தலைச் சந்தித்தார் கமல். ஆனால், போட்டி இடங்களில் எல்லாம் தோல்வி பயம் வந்தது. கட்சியில் கோவையில் போட்டியிட்டு அவரே வானதி சீனிவாசனிடம் தோற்றார். சினிமா பலம் என்பது இவ்வளவுதான் எனப் பலருக்குப் புரியவைத்தது அவரது தோல்வி.
இந்தப் பட்டியலில் கட்டாயம் சீமானை விட முடியாது. அவர் இயக்குநர்தான். நடிகராகவும் இருந்துள்ளார். அவரது நாம் தமிழர் கட்சி, தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் வளர்ந்துவரும் கட்சியின் பட்டியலில் உள்ளது. தேர்தல் களத்தில் சீமான் கட்சி வெற்றி பெறவில்லை என்றாலும் அவர் தமிழக அரசியலில் புதிய சக்தியாகவே கருதப்படுகிறார்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications