அப்போ கேகே ஷா - எம்ஜிஆர்.. இன்று ஆர்.என்.ரவி - எடப்பாடி பழனிசாமி.. அதே ரூட்டில் பயணிக்கும் அதிமுக!
சென்னை: திமுகவின் 4.5 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார். அதிமுகவை தொடங்கிய போது எம்ஜிஆர் பின்பற்றிய அதே யுக்தியை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியலை அதிமுக தீவிரப்படுத்தி இருக்கிறது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்துக்கொண்டு, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 2 மாதங்களில் இருமுறை ஆளுநரை சந்தித்து மு.க.ஸ்டாலின் புகாரளித்திருந்தார். தற்போது திமுகவின் ரூட்டையே எடப்பாடி பழனிசாமி பின்பற்றி இருக்கிறார். ஜனவரி முதல் வாரத்திலேயே எடப்பாடி பழனிசாமியும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பார்த்து ஊழல் பட்டியலை கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது ஸ்டாலினின் ஸ்டைல் என்பதை விடவும், எம்ஜிஆர் ஸ்டைல் என்று சொல்லலாம். ஏனென்றால் 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், நவம்பர் 5ஆம் தேதி அப்போதிய முதல்வர் கருணாநிதி மீதான ஊழல்களை பட்டியலிட்டு புகார் கொடுத்தார். எம்ஜிஆர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் 32 புகார்கள் அடங்கிய பட்டியலை எடுத்து ஊர்வலமாக சென்று அப்போதைய ஆளுநர் கேகே ஷாவிடம் கொடுத்தனர்.
ஆனால் அந்த புகார் பட்டியலை கருணாநிதிக்கு அனுப்பப் போவதாக ஆளுநர் கேகே ஷா கூற, உடனடியாக புகார் திரும்பப் பெற்றுக் கொண்டு குடியரசுத் தலைவரிடம் எம்ஜிஆர் சென்று கொடுத்தார். இந்த புகாரை 4 ஆண்டுகள் கிடப்பில் போட்ட இந்தியா காந்தி தலைமையிலான மத்திய அரசு, பின்னர் மீண்டும் தூசு தட்டியது. 1976ஆம் ஆண்டு ஜனவரி 31ல் கருணாநிதி தலைமையிலான கருணாநிதி அரசு கவிழ்க்கப்பட்டது. '
தொடர்ந்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மீதான ஊழல் புகாரை விசாரிக்க நீதிபதி சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த குழு நடத்த விசாரணைக்கு பின், ஊழல்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்துள்ளன என்று சான்றிதழ் அளிக்கப்பட்டதாக பேசப்பட்டது.
ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இந்திரா காந்தியுடன் திமுக கூட்டணி வைத்த நிலையில் சர்க்காரியா கமிஷன் கைவிடப்பட்டது. இதனை அதிமுகவினர் இப்போது வரை சர்க்காரியா கமிஷன் என்று திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டின் போது விமர்சித்து வருகின்றனர். தற்போது 56 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக மீதான ஊழல் பட்டியலை அதிமுக கையில் எடுத்து ஆளுநர் வசம் அளித்துள்ளது.
அப்போதும் ஆளுங்கட்சியாக திமுகவும், மத்தியில் ஆளுங்கட்சியாக காங்கிரஸும் இருந்தன. கிட்டத்தட்ட திமுக இப்போது பாஜகவை எதிர்ப்பது போல் அப்போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களமாடிய நேரம் அது. இதனால் அதிமுகவின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications