ஆருத்ரா மோசடி: யார் யாருக்கு எவ்வளவு பணம்? அக்கவுன்ட் தகவல்களை அளித்த மைக்கேல் ராஜ்.. பரபர தகவல்கள்!
சென்னை : ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ரூ.1,749 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்த விவரங்களை மைக்கேல் ராஜ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி ஹரீஷ் உள்ளிட்ட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆருத்ரா நிறுவன இயக்குநர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

பரபர விசாரணை : பாஜக நிர்வாகி ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் அவர், பாஜகவில் மாநில பொறுப்பு பெற்றுத் தர சிலரிடம் பணம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு வழக்கறிஞர் அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக மாவட்ட பொறுப்பில் உள்ள டாக்டர் சுதாகர் ஆகிய இருவருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
அதேபோல ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவருக்கும் வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளார்.
கணக்குகளை டீல் செய்த மைக்கேல் ராஜ் : இதற்கிடையே, ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான மைக்கேல் ராஜ் கடந்த 29ஆம் தேதி துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். அவர் 7 நாட்கள் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆருத்ரா நிதி நிறுவன வங்கிக் கணக்குகள் முழுவதையும் மைக்கேல் ராஜ் தான் கையாண்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைக்கேல் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் ரூ.1,749 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை செய்த விவரங்களை அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதோ அந்த வங்கி கணக்கு உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து ஆருத்ரா நிறுவனம் ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், தற்போது 1,749 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளின் போலீசாருக்கு தெரியவந்துள்ளதால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications