பால் முகவர்கள் சங்கம் பொன்னுச்சாமிக்கு... கமல் கட்சியில் முக்கியப் பதவி
சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமியை, மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணி செயலாளராக நியமித்துள்ளார் கமல்ஹாசன்.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கமல், பொன்னுச்சாமிக்கு ம.நீ.ம. நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கமல் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இயங்கி வந்த பொன்னுச்சாமியை, கமல்ஹாசனே வாலன்ட்ரியாக அழைத்து தனது கட்சியில் பொறுப்பு வழங்கி கவுரவித்துள்ளார்.

பொன்னுச்சாமி
தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவராக இருப்பவர் பொன்னுச்சாமி. அவ்வப்போது பால் முகவர்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்ததன் மூலம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தவர் இவர். மேலும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கூட பல நேரங்களில் சூடான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

மக்கள் குறை
வடசென்னை பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமி அந்தப் பகுதி மக்களின் குறைகளை களைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் துணை அவருக்கு தேவைப்பட்டது. திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்த பொன்னுச்சாமி, கமல் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

பதவி வேண்டாம்
இதனிடையே கடந்த ஓராண்டில் கமல்ஹாசனை பல முறை சந்தித்து பேசிய பொன்னுச்சாமி,பால்வளத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றியும், முகவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் முறையிட்டு வந்தார். தனிப்பட்ட முறையில் தனக்காகவோ, குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரை கமலிடம் எதுவும் அவர் கேட்டதில்லை.

பதவி கொடுப்பு
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் தொழிலாளர் நல அணியை புதிதாக தொடங்கிய கமல், அதற்கு யாரை செயலாளராக நியமிக்கலாம் என கடந்த ஒரு வாரமாக யோசனை செய்தார். திடீரென பொன்னுச்சாமியை அழைத்த கமல், ம.நீ.ம.தொழிலாளர் நல அணி செயலாளர் பதவியை ஏற்று செயல்படும்படி கேட்டுக்கொண்டார். அண்மையில் தான் ம.நீ.ம.வில் பொன்னுச்சாமி உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications