பால் விலை அதிரடியாக உயர்வு.. தமிழ்நாட்டு மக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த தனியார் பால் நிறுவனங்கள்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 2 உயர்ந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்தியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆரோக்கியா நிறுவனம், கடந்த மாதம் பால், தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இந்நிலையில், திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் தற்போது பால் விலையை உயர்த்தியுள்ளன.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலம் ஆவின் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனையை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதேபோல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலை, செலவு போன்றவற்றிற்கு ஏற்ப தாங்களாகவே விலை நிர்ணயம் செய்து கொள்கின்றன.

இந்நிலையில், ஆரோக்கியா நிறுவனம் பால், தயிர் விற்பனை விலையை கடந்த நவம்பர் 8 ஆம் முதல் உயர்த்தியது. பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருள்கள் விலையேற்றம் போன்ற காரணங்களை காட்டி ஆரோக்கியா நிறுவனம், பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூபாய் 2 உயர்த்தியது.
இந்நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளன. புதிய விற்பனை விலையை மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்கள் நேற்று முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ளன. சீனிவாசா பால் நிறுவனம் நாளை முதல் பால் விற்பனை விலை உயர்வை அமலுக்கு கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது தனியார் பால் நிறுவனங்களின் சமன்படுத்தப்பட்ட பால் 500 மிலி பால் பாக்கெட் 26 ரூபாயில் இருந்து 27 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500மிலி பால் பாக்கெட் 30 ரூபாயில் இருந்து 31 ரூபாயாகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் 60 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், நிறைகொழுப்பு (Full Cream) 500 மிலி பால் பாக்கெட் 35 ரூபாயில் இருந்து 36 ரூபாயாகவும், 1 லிட்டர் பால் பாக்கெட் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பால் விற்பனை விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் சரி, இந்தியா முழுவதிலும் சரி பால் கொள்முதல் விலையில் தற்போது பெரிய அளவில் எந்த விலை உயர்வு மாற்றங்களும் இல்லாத நிலையில் பால் விற்பனை விலையை மறைமுகமாகவும், நேரடியாகவும் தன்னிச்சையாக உயர்த்தியுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இனி கடைகளுக்கு சென்று டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட பால் பாக்கெட்டுகளை வாங்குவோர் கூடுதல் விலை கொடுக்க வேண்டி வரும். ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நேரத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications