வெள்ளத்தில் சிக்கிய பால் வியாபாரி.. உடனே படகில் சென்று பத்திரமாக மீட்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள்!
சென்னை: பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மணலி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பால் வியாபாரி ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை சென்னை உட்பட பல மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 16,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 60 கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த மணலி புதுநகர் அருகே உள்ள இடையஞ்சாவடியைச் சேர்ந்தவர் சுரேஷ். பால் வியாபாரியான இவர் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். சுரேஷ் உள்ளிட்ட சிலர் நேற்று மதியம், கொசஸ்தலை ஆறு செல்லும் பாதையில் தங்களது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை பார்த்து மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து கரைக்கு ஓடி வந்தனர். ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளும் கரைக்குச் சென்றன.
ஆனால் பால் வியாபாரி சுரேஷ், ஆர்ப்பரித்து பாய்ந்து வந்த வெள்ள நீருக்கு நடுவே சிக்கிக்கொண்டார். நடுவே இருந்த பாதுகாப்பாக மணல் திட்டு ஒன்றின் மீது ஏறி நின்றுகொண்டார் சுரேஷ். பின்னர் மாநகராட்சி அவசர உதவி எண்ணிற்கு தகவல் தெரிவித்து, வெள்ளத்தில் சிக்கிய தன்னை காப்பாற்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, மணலி மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில் வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம், மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் பாஸ்கர், மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் அங்கு வந்து, ரப்பர் படகு மூலம் சென்று, சுரேஷை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து, பூண்டி ஏரி உபரி நீர் திறப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூண்டி அணையின் பாதுகாப்பு கருதி தற்போது16,500 விநாடிக்கு கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications