ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்!
சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருவது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி உள்ளார் அதிமுக எம்.பி இன்பதுரை. விளையாட்டு அரசியல் செய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இன்பதுரை கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா, விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். விஜய் அமைச்சரவையில் சீனியாரிட்டி அடிப்படையில் 3வது இடத்தில் இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பாக பிரஸ் மீட்களில் பங்கேற்று வருகிறார் ஆதவ் அர்ஜுனா.

இந்நிலையில், அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருவதைச் சுட்டிக்காட்டி, ஒரே நேரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், கூடைப்பந்து சம்மேளன தலைவராகவும் பொறுப்பு வகிப்பது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார் அதிமுக எம்.பி இன்பதுரை.
இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அப்படி எந்த விதிமுறையும் இல்லை. அதிமுகவினருக்கு விளையாட்டும் தெரியாது, அரசியலும் தெரியாது." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான இன்பதுரை இன்று வெளியிட்டுள்ள பதிவில், "விளையாட்டுத் துறை அமைச்சர், கூடைப்பந்து சங்கத்தின் (Basketball Association) தலைவராக நீடிப்பது நலன் முரண்பாடு (Conflict of Interest) குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது!
2015-ல் 'BCCI v. Cricket Association of Bihar' என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மூன்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்தது. 'Conflict of Interest' (நலன் முரண்பாடு) என்ற தலைப்பில் அந்தக் குழு அளித்த அறிக்கையின் முதல் பரிந்துரைகளில் ஒன்றிய அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் விளையாட்டுச் சங்கங்களில் பதவி வகிக்கக் கூடாது என்பதுதான்! இந்தப் பரிந்துரைகளில் பலவற்றை உச்ச நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது.
"விதிகள் ஏதும் இல்லை" என்று கூறும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இதனை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்துச் சொல்ல வேண்டும்!
அத்துடன், SDAT (Sports Development Authority of Tamil Nadu) அமைப்பு 1992-ல் அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (SAF Games), நேரு விளையாட்டரங்கம் நவீனப்படுத்தப்பட்டதுடன், நேரு உள்விளையாட்டு அரங்கம் (Nehru Indoor Stadium), மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு உள்கட்டமைப்புகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டன.
மேலும், அரசு வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு 2018-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் "விளையாட்டு அரசியல்" செய்யும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications