அனைவருக்கும் இலவசமாக தேநீர் கொடுங்கள்.. இதுதான் ஸ்டாலின்.. சட்டசபையில் நெகிழ்ந்த அன்பில் மகேஷ்
சென்னை : அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ், சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார்.. தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின் என தமிழக சட்டசபையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வில் இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறைகளின் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்றது.
பிற்பகலில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மாணவர்களுக்கு மீன் அளிப்பதைவிட மீன் பிடிப்பதை கற்றுக் கொடுக்கும் வகையில் இருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மதிய உணவு தருகிறேன் படியுங்கள் என காமராஜர் கூறினார். சத்துணவு தருகிறேன் படியுங்கள் என முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சத்துணவோடு முட்டை தருகிறேன், பஸ் பாஸ் தருகிறேன் படியுங்கள் என முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறினார். சத்துணவு மட்டுமல்ல மடிக்கணினி சைக்கிள் தருகிறேன் படியுங்கள் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களது கல்விக்கான செலவையும் விடுதிக்கான செலவையும் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.

முதல்வரின் சமூக நீதி
அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரையும் குவளையும் இலவசமாக கொடுங்கள் என்கிறார் நம்முடைய முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் இந்த பேச்சை கேட்கும் போது இது தான் சமூக நீதி என்று எங்களால் நெஞ்சை உயர்த்தி கூற முடியும்.

முதல்வரின் அற்புதமான திட்டம்
மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அற்புதமான திட்டம் பல விவாதங்கள் இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்த திட்டம். பல திட்டங்களை பல முன்னெடுப்புகளை மாணவர் நலன் கருதி அரசு எடுத்துள்ளது. பல பாராட்டுக்கள் வருகிறது சில விமர்சனங்கள் வருகிறது பல கருத்துக்கள் வருகிறது. இதனை ஏற்றுக் கொண்டு குதிரை போல உழைத்துக் கொண்டு இருக்கிறோம்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேசினார்.












Click it and Unblock the Notifications