என் கடன் பணி செய்து கிடப்பதே! குளுக்கோஸ் நீடில் கூட கழற்றவில்லை! ஆய்வுக்கூட்டம் நடத்திய துரைமுருகன்!
சென்னை: குளுக்கோஸ் போடுவதற்காக தனது கையில் செலுத்தப்பட்டிருந்த ஊசியை கூட இன்னும் கழற்றாத நிலையில் தலைமைச் செயலகத்திற்கு சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை, ஒரு வாரமாவது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள்.
ஆனால் வீட்டுக்கு வந்த 2-வது நாளே என் கடன் பணி செய்து கிடப்பதே என்கிற வகையில் ஓய்வை ஒதுக்கி வைத்துவிட்டு பரபரவென பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

மூத்த அமைச்சர்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குளுக்கோஸ் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் காரணமாக உடல்நலம் தேறி இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அமைச்சர் துரைமுருகனை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்னர் மருத்துவர்கள் அவருக்கு ஒரு அன்புக் கட்டளை போட்டிருக்கின்றனர்.

மருத்துவர்கள் அட்வைஸ்
அதாவது ஒரு வார காலமாவது நீங்கள் வீட்டில் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் எந்தப் பயணமும் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மருத்துவர்களிடம் சரி சரி எனக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பிய துரைமுருகன், ஒரே நாளில் தலைமைச் செயலகம் சென்று சுரங்கம் மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியிருக்கிறார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அதிகாரிகளை ஆய்வுக்கூட்டத்தின் போது கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்திருக்கிறார்.

குடும்பத்தினர் கோரிக்கை
இதனிடையே தலைமைச் செயலகம் புறப்பட்ட துரைமுருகனிடம் அவரது குடும்பத்தினரும் இன்னும் இரண்டு நாட்களுக்கு ஓய்வெடுங்கள் பிறகு செல்லலாம் என கேட்டிருக்கின்றனர். ஆனால் எதையும் தனது செவியில் போட்டுக்கொள்ளாத அவர், 80 வயதை கடந்த நிலையிலும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டார். இன்னும் முழுமையாக அவரது கையில் மாட்டப்பட்டுள்ள குளுக்கோஸ் போடுவதற்கான நீடில் கூட கழற்றப்படவில்லை. இதனை பார்த்த அதிகாரிகளுக்கே பெரும் வியப்பை தந்திருக்கிறது.

ஸ்டாலின் பாணி
முதல்வர் ஸ்டாலின் பாணியில் இவரும் ஓய்வை விரும்பாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பது திமுகவினர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. இதனிடையே சக அமைச்சர்களும், ஆதரவாளர்களும் துரைமுருகனை நலம் விசாரித்து வருகின்றனர். நாளை மறுதினம் முதல் வழக்கம் போல் சட்டசபை நிகழ்வுகளிலும் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications