திமுகவில் பல எம்எல்ஏக்கள் உருவாக காரணம் இவர்தான்.. நெகிழ்ந்த எ.வ.வேலு.. கும்பிட்ட உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: திமுகவில் பல எம்எல்ஏக்கள் வெற்றி பெற காரணம் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் ஏ.வ.வேலு சட்டசபையில் புகழாரம் சூட்டினார்.
திமுக இளைஞரணி செயலாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த சட்டசபை தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக மத்திய அரசு கூறிவிட்டு இதுவரை எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின், தேர்தல் காலத்தில், செய்த பிரச்சாரம் பெரிதும் கவனம் ஈர்த்தது.

செங்கல் வைத்து பிரச்சாரம்
கையில் ஒரு செங்கல் எடுத்துக்கொண்டு, ஊர் ஊராக உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த செங்கல் தான் மத்திய அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது. இத்தனை வருடங்கள் ஆனபிறகும் செங்கல் மட்டும்தான் இருக்கிறது. மருத்துவமனை கட்டப்படவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ததற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததை பார்க்க முடிந்தது. எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் தனது தொகுதியில் மூலைமுடுக்கெல்லாம் சுற்றிவந்து நலத்திட்ட உதவிகளை செய்துவருவதை தினந்தோறும் செய்திகளாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திரையில் நகைச்சுவை தென்றல்
இதையெல்லாம் குறிப்பிட்டு சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று புகழ்ந்துள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் வேலு பேசுகையில், என்ன கூறினார் தெரியுமா? இதோ பாருங்கள்: திரையுலகத்தில் திராவிட கொள்கைகளை எடுத்துச் செல்வதற்கும், நம்முடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்வதற்கும் நகைச்சுவை தென்றலாக உதயநிதி ஸ்டாலின் உலவிக் கொண்டிருக்கிறார்.

திராவிட நடிகர்
உதயநிதி ஸ்டாலின் என்று சொன்னதும் எங்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் இந்த இயக்கம் திரையுலகத்தில் பட்டுப் போய் விடுமோ என்று நாங்கள் நினைத்த நிலையில் ஒரு திராவிட நடிகர் எங்களுக்கு கிடைத்து இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. திராவிட நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்லும் போதெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மேஜையை தட்டுகிறார்கள். அது தலைவர் மகன் என்பதாலா.. இல்லை, இல்லை.

கும்பிட்ட உதயநிதி ஸ்டாலின்
தேர்தல் பிரச்சார காலம் மிகவும் குறைவாக இருந்தது. எங்கள் தலைவரால் 234 தொகுதிகளுக்கும் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலையில் எஞ்சியிருக்கும் கிராமப்பகுதிகளில் உள்ள தொகுதிகளில் எல்லாம், அதாவது ஸ்டாலின் எங்கெல்லாம் செல்ல முடியவில்லையோ அங்கெல்லாம் உதயநிதி ஸ்டாலின் மூலை முடுக்கெல்லாம் சென்று தன்னுடைய பிரச்சாரத்தால், தன்னுடைய உழைப்பால் இங்கே கைதட்டுகிற பல சட்டசபை உறுப்பினர்கள் உருவாகுவதற்கு உந்து சக்தியாக இருந்தவர். இவ்வாறு வேலு பேசும்போது அதைக் கேட்ட உதயநிதி ஸ்டாலின் உட்கார்ந்த நிலையில் கை எடுத்து கும்பிட்டு, தனது நன்றியை வெளிப்படுத்தினார். அப்போது திமுக சட்டசபை உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications